வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு முதல்கட்ட பயிற்சி


வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு  முதல்கட்ட பயிற்சி
x

குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 இடங்களில் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி நேற்று நடந்தது. இதில் 4,500 பேர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 இடங்களில் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி நேற்று நடந்தது. இதில் 4,500 பேர் கலந்து கொண்டனர்.
பயிற்சி
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. மொத்தம் 979 வார்டுகளுக்கு 1324 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்தநிலையில் வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் தலைமை வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி தேர்தல் வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் தலைமை வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு நாகர்கோ வில் இந்துக்கல்லூரி மற்றும் புனித அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடந்தது.
11 இடங்களில்
இந்த பயிற்சி வகுப்புகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை மாநகராட்சி ஆணையரும், மாநகராட்சி தேர்தல் அதிகாரியுமான ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல் 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளின் வாக்குச்சாவடி அதிகாரிகள், தலைமை அதிகாரிகள் ஆகியோருக்கான பயிற்சி முகாம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி, சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி, ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி, மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளி, நெய்யூர் எல்.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முளகுமூடு புனித ஜாண்பால் பி.எட். கல்லூரி, ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி. கல்லூரி, தொலையாவட்டம் புனித ஜூட்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி ஆகிய இடங்களில் நடந்தது. மொத்தம் 11 இடங்களில் இந்த பயிற்சி முகாம் நடந்தது.
வாக்குப்பதிவு எந்திரம் இயக்குதல்
இந்த பயிற்சி முகாமில் வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிற துறை அதிகாரிகள் என மொத்தம் 4500 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக பயிற்சிக்கு வந்த வாக்குக்சாவடி அதிகாரிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கைகளை சுத்தம் செய்ய சானிடைசரும் வழங்கப்பட்டது. பயிற்சி முகாமில் வாக்குச்சாவடி அதிகாரிகள் எவ்வாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் வருமாறு:-
வாக்குச்சாவடி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் சட்டத்தையும், விதிமுறைகளையும் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளையும், நெறிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு வாக்குப்பதிவு நடத்துதல் தொடர்பான விதிகள், நடைமுறைகள், வாக்குப்பதிவு எந்திரத்தை இயக்குதல் குறித்து அறிந்திருத்தல் வேண்டும்.
ஒத்திகை
வாக்குச்சாவடி தலைமை அதிகாரிகள் மற்றும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு அதிகாரிகள் ஆகியோர் வாக்குப்பதிவு ஒத்திகை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொருவரும் தனித்தனியாக வாக்குப்பதிவு எந்திரத்தினை இயக்கி ஒத்திகை பார்க்க வேண்டியது இன்றியமையாததாகும். தாள் முத்திரை ஒட்டுத்தாள் முத்திரை, சிறப்பு அட்டை மற்றும் முகவரிச்சீட்டு ஆகியவற்றை பொருத்தும் முறை குறித்தும் நன்கு அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.
பதிவான வாக்குகளின் கணக்கு மற்றும் தாள் முத்திரைக் கணக்கு ஆகியவற்றுக்கான மாதிரிகளை (படிவம்-23) தயாரித்து பார்த்தல் வேண்டும். 
அறிவுரைகள்
வாக்குப்பதிவு நாளன்று காலை 6 மணிக்கு வாக்குச்சாவடியில் பணியாற்ற தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படும் முறை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் எவ்வாறு அவற்றை இயக்கி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற விவரங்களும் பயிற்சியின்போது அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் வருகிற 9-ந் தேதியும், 3-ம் கட்ட பயிற்சி முகாம் 18-ந் தேதியும் நடைபெற உள்ளது.

Next Story