திருப்புவனம், காரைக்குடியில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு


திருப்புவனம், காரைக்குடியில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
x
தினத்தந்தி 31 Jan 2022 6:11 PM GMT (Updated: 31 Jan 2022 6:11 PM GMT)

தை அமாவாசையையொட்டி திருப்புவனத்தில் முன்னோர்களுக்கு திதி ெகாடுத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

திருப்புவனம்,

தை அமாவாசையையொட்டி திருப்புவனத்தில் முன்னோர்களுக்கு திதி ெகாடுத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தை அமாவாசை

திருப்புவனத்தில் புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கோவிலின் எதிரே உள்ள வைகை ஆற்று கரையில் முன்னோர்களுக்கு தினந்தோறும் திதி மற்றும் தர்ப்பணம் செய்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இங்கு திதி- தர்ப்பணம் செய்வது காசியை விட விசேஷம் கூடுதல் என முன்னோர்கள் கூறுவதுண்டு. இதனால் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து திதி மற்றும் தர்ப்பணம் செய்து செல்வார்கள். 
இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் திதி கொடுப்பது சிறப்பு வாய்ந்ததாகும். இதற்காக வைகை ஆற்றங்கரையில் நீளமான பந்தல் அமைத்து திதி-தர்ப்பண நிகழ்ச்சிகள் நடைபெறும். 

திதி கொடுத்து வழிபாடு

 நேற்று தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே முன்னோர்களுக்கு திதி-தர்ப்பணம் கொடுக்க வைகை ஆற்றில் ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். முன்னதாக போலீசார் வைகை ஆற்றுக்கு செல்லும் அனைத்து பாதையிலும் தடுப்புகள் அமைத்து இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். இதனால் மக்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் நடந்தே சென்று திதி-தர்ப்பணம் கொடுத்து திரும்பினார்கள். 
இதேபோல் புஷ்பவனேசுவரர் சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் நிர்வாகம் சார்பில் ஒருவழிப்பாதை அமைத்திருந்தனர். அதன்படி புஷ்பவனேசுவரர் சன்னதி வழியாக சென்று சாமி தரிசனம், விளக்கு போட்டுவிட்டு சவுந்திரநாயகி அம்மன் சன்னதி வழியாக வெளியேறுமாறு செய்திருந்தனர். திருப்புவனத்திலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் நின்றன. திதி- தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி மதியம் வரை தொடர்ந்து நடைபெற்றது.

காரைக்குடி 

காரைக்குடி அருகே கோவிலூரில் உள்ள திருநெல்லை அம்பாள் கொற்றாளீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் அதிகாலை முதல் ஏராளமானோர் தெப்பக்குளத்தில் குளியல் முடித்த பின்னர்  படித்துறையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். காரைக்குடி செக்காலை சிவன்கோவில் பகுதியில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். இதேபோல் தேவகோட்டை அருகே கண்டதேவியில் உள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் திருக்குளத்தின் படித்துறையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். இதேபோல் காளையார்கோவிலில் உள்ள சொர்ணகாளீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்து தங்களது முன்னோர்களை வழிபட்டனர்.

Next Story