வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அம்மா மினி கிளினிக் பணியாளர்கள் திடீர் தர்ணா


வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்  அம்மா மினி கிளினிக் பணியாளர்கள் திடீர் தர்ணா
x
தினத்தந்தி 31 Jan 2022 6:20 PM GMT (Updated: 31 Jan 2022 6:20 PM GMT)

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அம்மா மினி கிளினிக் பணியாளர்கள் 5 மாத ஊதியம் வழங்கக்கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அம்மா மினி கிளினிக் பணியாளர்கள் 5 மாத ஊதியம் வழங்கக்கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ‘பி’ பிளாக் கட்டிடத்தின் முன்பு நேற்று காலை அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இங்கு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என போலீசார் கூறினர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து சுகாதாரத்துறை அலுவலக அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் குறித்து அம்மா கிளினிக் பணியாளர்கள் கூறியதாவது:-

ஊதியம் வழங்க வேண்டும்

நாங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட அம்மா கிளினிக்குகளில் பல்நோக்கு மருத்துவ பணியாளராக பணியில் சேர்ந்தோம். தற்போது திடீரென அனைத்து அம்மா கிளினிக்குகளும் மூடப்பட்டு விட்டது.

அதற்கு பிறகு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கொரோனா மையங்களில் பணி தருவதாக கூறினார்கள். ஆனால் பலருக்கு வேலை தரவில்லை. மேலும் கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. எங்களது வாழ்வாதாரத்துக்காக மீண்டும் பணி வழங்க வேண்டும். சம்பளத்தையும் உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த திடீர் தர்ணா போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
  • chat