25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்


25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
x
தினத்தந்தி 22 March 2018 11:15 PM GMT (Updated: 23 March 2018 12:34 AM GMT)

உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்பட 10 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு 58 எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்பட 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதி உள்ள 25 இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதில் 31 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் மாலை 5 மணி வரை நடைபெறும். அதன் பிறகு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்றவர்களின் விபரம் அறிவிக்கப்படும்.

உத்தரபிரதேசத்தில் 10 இடங்களுக்கு மத்திய மந்திரி அருண் ஜெட்லி உள்பட 11 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பா.ஜனதா வேட்பாளர்கள் 8 இடத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. அந்த மாநிலத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் புதிய கூட்டணி அமைத்து உள்ளது. இதனால் அதிருப்தியில் உள்ள இரு கட்சி எம்.எல்.ஏ.க்கள் மூலம் மேலும் ஒரு இடத்தை பெற வாய்ப்பு உள்ளதாக பா.ஜனதா கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

மேற்கு வங்காளத்தில் 5 இடங்களுக்கு 6 பேரும், கர்நாடகாவில் 4 இடங்களுக்கு 5 பேரும், தெலுங்கானாவில் 3 இடங்களுக்கு 4 பேரும், ஜார்கண்டில் 2 இடங்களுக்கு 3 பேரும், சத்தீஸ்காரில் ஒரு இடத்துக்கு 2 பேரும் போட்டியிடுகின்றனர்.


Next Story