புத்த கயா குண்டுவெடிப்பு: குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை அறிவிப்பு


புத்த கயா குண்டுவெடிப்பு: குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2018 2:13 AM GMT (Updated: 1 Jun 2018 2:13 AM GMT)

பீகாரில் உள்ள புத்தகயா பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.

பாட்னா,

உலகப் புகழ்பெற்ற புத்தகயா பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், பலர் காயமடைந்தனர். புத்த மதத் துறவிகள், வெளிநாட்டுப் பயணிகள் என பலர் அவர்களில் அடங்குவர்

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் அந்த அமைப்பைச் சேர்ந்த இம்தியாஸ் அன்சாரி, ஹைதர் அலி, முஜீப் உல்லா, ஒமர் சித்திக், அசாருதீன் குரேஷி ஆகியோர் கைது செய்து விசாரிக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள்தான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் என்பது உறுதியானது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் 5 பேரையும் குற்றவாளிகள் என கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து, அவர்களுக்கு அளிக்கப்பட உள்ள தண்டனைகள் மீதான விசாரணை நீதிபதி மனோஜ் குமார் சின்ஹா முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு தரப்பு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, தண்டனை விவரங்களை வெள்ளிக்கிழமை(இன்று) அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

Next Story