வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி


வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி
x
தினத்தந்தி 1 Jun 2018 7:23 AM GMT (Updated: 1 Jun 2018 7:23 AM GMT)

ஆந்திராவில் நகராட்சி பில் கலெக்டர் ஒருவர் பணிக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், 4 வீடுகள், 20 வீட்டுமனைகள், 50 கோடி ரூபாய் சொத்து என சொத்து குவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


அரசியல்வாதிகள் பலர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து வழக்குகளை சந்தித்து வருவது அவ்வப்போது நடந்து வரும் சம்பவம். ஆனால் நகராட்சி ஊழியர் ஒருவர், அதுவும் பில் கலெக்டராக பணியாற்றி வரும் ஒருவர் பல கோடி சொத்து குவித்து சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் நகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் முத்ரபோயினா மாதவ். இதே பணியில் இருந்த அவரது தந்தை கடந்த 2012-ம் ஆண்டு மரணம் அடைந்தார். பணியில் இருந்தபோது அவர் உயிரிழந்ததால், வாரிசான மாதவுக்கு கருணை அடிப்படையில் இந்த வேலை கிடைத்தது.

பணியில் சேர்ந்தது முதல் அவர் பலவித ஊழல்கள் செய்ததாக கூறப்படுகிறது. முறைகேடான முறையில் சொத்து விவரங்களுக்கு குறைவான தொகைக்கு ரசீது கொடுத்து அதற்காக லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. குண்டூரில் உள்ள வீடுகள், வணி வளாகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என நகராட்சியின் கீழ் வரும் அனைத்திற்கும் இவர் வைத்ததே வரி. குண்டூர் அருண்டல்பேட் பகுதியில் மனைவியின் பெயரில் தனியாக அலுவலகம் ஒன்றையும் இவர் நடத்தி வந்துள்ளார். இதன் மூலம் தனது வரவு செலவுகளை நடத்தி வந்துள்ளார்.

வேறு சில அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு தொடர்ந்து அரங்கேறி வந்தது. புகார்கள் அதிமானதால், 2016-ம் ஆண்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் பின்னர் பணியில் சேர்ந்தார். அதன் பிறகும் முறைகேடுகள் தொடர்ந்தன.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாதவ் மீது புகார்கள் குவிந்தன. இதையடுத்து குண்டூர், மச்சாவரம், ஆகிய பகுதிகளில் மாதவிற்கு சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் இரு தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.

மாதவுக்கு சொந்தமான 7 இடங்கள், அவரது உறவினர்களுக்கு சொந்தமான 2 இடங்களில் சோதனை நடந்தது. இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், வீட்டு பத்திரங்கள், நகைகள், என மொத்தம் 50 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மாதவிற்கு சொந்தமாக 4 வீடுகள், 20 வீட்டுமனைகள், பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு குண்டூர் பகுதியில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஊழல் மூலம் பெறப்பட்ட பணத்தை மாதவ் நிலங்களில் முதலீடு செய்து பெருமளவு பணம் சம்பாதித்துள்ளார். அவரது முதலீடுகளுக்கு அதிகமான வருவாய் கிடைத்ததால், குறைவான காலத்திலேயே 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவு அவருக்கு சொத்து சேர்ந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆந்திராவை சேர்ந்த  பியூன் ஒருவர் ரூ 100 கோடி வரை சொத்து சேர்த்ததாக கூறபட்டது. நெல்லூர் மாவட்ட போக்குவரத்து கழக துணை கண்காணிப்பளர் அலுவலகத்தில் பியூனாக பணியாற்றி வருபவர் நரசிம்ம ரெட்டி (53). இவர் மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம் ஆனால் வருமானத்திற்கு அதிகமான சொத்து இருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர்  இவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.7 லட்சம் ரொக்கப்பணம், 2 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.20 லட்சம் வங்கி கணக்குகள் மற்றும் பிளாட் வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். அவர் வாங்கிய அனைத்து குடியிருப்புகளும் 250 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்தன. இவ்வாறு அவருக்கு 18 வீடுகள் உள்ளன.  அவரது சொத்து மதிப்பு ரூ.100 கோடி இருக்காலாம் என கூறப்பட்டது. 

Next Story