முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து நிறுத்தம்; இணையதள சேவை முடக்கம்


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து நிறுத்தம்; இணையதள சேவை முடக்கம்
x
தினத்தந்தி 2 Jun 2018 5:24 AM GMT (Updated: 2 Jun 2018 5:24 AM GMT)

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய காஷ்மீர் பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. #KashmirTrainServices

ஸ்ரீ நகர்,

காஷ்மீரில் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தம் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்க நடவடிக்கையின் பேரில் அங்கு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ராணுவப்படையினரால் பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில் இதனை கண்டித்து காஷ்மீர் பகுதிகளில் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. மேலும் மத தளங்களை அவமதித்தல், ஜாமியா மஸ்ஜித் பகுதிகளில் தேவையில்லாமல் அதிகப்படைகளை நிறுத்தி வைத்தல் போன்ற செயல்களையும் கண்டித்து இந்த பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. 

இதனிடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தம் குறித்து ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ”போலீசாரின் அறிவுறுத்தலின் படி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நேற்றிரவு முதல் தெற்கு காஷ்மீர் பகுதியில் ரெயில் போக்குவரத்தை நிறுத்தியுள்ளோம். அதன்படி பாட்காம், ஸ்ரீ நகர், அனந்த்நாக், காசிகுந்த் லிருந்து பானிஹாலிற்கு இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் மத்திய மற்றும் வடக்கு காஷ்மீர் பகுதிகளிலும் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார். கடந்த மே மாதத்தில் காஷ்மீர் பகுதியில் சுமார் 14 முறை ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே போல் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே உள்ள  நவ்ஹட்டா பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் வாகனத்தை சுற்றி வளைத்து தாக்க முற்பட்டனர். போராட்டக்காரர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக வாகனம், முன்னோக்கி செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், போராட்டக்காரர்கள் 3 பேர் மீது சி.ஆர்.பி.எப் வீரர்களின் வாகனம் ஏறி இறங்கியது. இதில் 21 வயதுமிக்க இளைஞர் ஒருவர் பலியானார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் மத்திய காஷ்மீர் பகுதியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

Next Story