தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: மனுக்களை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: மனுக்களை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 4 Jun 2018 10:30 PM GMT (Updated: 4 Jun 2018 8:59 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பிரச்சினை குறித்த மனுக்களை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது

புதுடெல்லி,

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 6 பேரின் உடல்கள் இன்னும் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளன.

தாங்கள் குறிப்பிடும் மருத்துவ வாரியத்தில் உள்ள டாக்டர்கள் மூலம் அந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும் என்றுகோரி கோரி அவர்களின் குடும்பத்தினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் கோரி மேலும் 2 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

மனுதாரர்கள் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை கால அமர்வு முன்பு ஆஜரான வக்கீல், இந்த மனுக்களை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுக்கள் வருகிற ஜூலை 1-ந்தேதிக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story