2019-ல் ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு நாங்கள் ‘ரெடி’ அகிலேஷ் யாதவ் சொல்கிறார்


2019-ல் ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு நாங்கள் ‘ரெடி’ அகிலேஷ் யாதவ் சொல்கிறார்
x
தினத்தந்தி 6 Jun 2018 10:12 AM GMT (Updated: 6 Jun 2018 10:12 AM GMT)

2019-ல் ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு நாங்கள் ரெடி என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். #AkhileshYadav


லக்னோ,

பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என கருத்து சமீபகாலமாக எழுந்து வருகிறது. அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து இதற்கு ஒப்புதல் அளித்தால் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் கமி‌ஷனும் கூறியிருந்தது. பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்த நிதி ஆயோக் ஆதரவு தெரிவித்தது. பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு மத்தியில் உள்ள பாரதீய ஜனதாவும் ஆதரவாக உள்ளது.   இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பும் எழுந்தது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி, 2019-ல் ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு நாங்கள் ரெடி என அறிவித்து உள்ளது.

லக்னோவில் சமாஜ்வாடி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், ஒரே தேசம், ஒரே தேர்தல் மிகவும் நல்லது. நாங்கள் அதனை வரவேற்கிறோம். எங்களுடைய கட்சி 2019-ல் சட்டமன்ற மற்றும் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்கு ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று கூறிஉள்ளார். 

அம்மாநில மந்திரி சித்தார்த் நாத் சிங், தேசத்தில் இரண்டு கட்டமாக பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்தலை நடத்துவது தொடர்பான பரிந்துரையை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் சமர்பித்தார். ஒரே தேசம், ஒரே தேர்தல் விவகாரத்தில் அறிக்கையை தயார் செய்த முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் உருவாகி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 2017-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது, பா.ஜனதா வெற்றியை தனதாக்கியது. இந்நிலையில் 2019-ல் ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு நாங்கள் ரெடி என சமாஜ்வாடி அறிவித்து உள்ளது.

Next Story