கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம்: 25 மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர்


கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம்: 25 மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர்
x
தினத்தந்தி 6 Jun 2018 12:06 PM GMT (Updated: 6 Jun 2018 12:06 PM GMT)

கர்நாடகாவில் முதல் மந்திரி குமாரசாமி தனது அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்தார். 25 மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர்

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரிய கட்சியான பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் அனுமதி வழங்கினார். எடியூரப்பா முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தது. கடந்த மே மாதம் 23–ந் தேதி குமாரசாமி முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாக நியமிக்கப்பட்டார். மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் காங்கிரஸ் 22 பதவியும், ஜனதா தளம்(எஸ்) 12 பதவியும் பகிர்ந்து கொண்டன. இலாகா ஒதுக்கீடும் நிறைவடைந்துவிட்டது.

இந்த நிலையில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா இன்று பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் பிற்பகல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் 15 மந்திரிகளும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் 10 மந்திரிகளும் என மொத்தம் 25 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கான துறைகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை.

Next Story