முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘தனுஷ்’ பீரங்கி இறுதிக்கட்ட சோதனை வெற்றி: விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறது


முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘தனுஷ்’ பீரங்கி இறுதிக்கட்ட சோதனை வெற்றி: விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறது
x
தினத்தந்தி 9 Jun 2018 12:15 AM GMT (Updated: 8 Jun 2018 10:18 PM GMT)

முதல்முறையாக முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘தனுஷ்’ பீரங்கி இறுதிக்கட்ட சோதனை வெற்றியடைந்ததை அடுத்து விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறது.

புதுடெல்லி, 

முதல் முறையாக முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘தனுஷ்’ பீரங்கி, நீண்ட தொலைவில் உள்ள இலக்கை குறிபார்த்து சுடவல்லது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் இது தயாரிக்கப்பட்டது.

155 எம்எம் ரகத்தை சேர்ந்த இந்த பீரங்கி, 38 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்கி அழிக்கும். இது, போபர்ஸ் பீரங்கி தாக்கும் தூரத்தை விட 11 கி.மீ. அதிகம் ஆகும். ‘உள்நாட்டு போபர்ஸ்’ என்றும் ‘தனுஷ்’ அழைக்கப்படுகிறது.

குளிர் பிரதேசமான சிக்கிம், லே, வெயில் பிரதேசமான ஒடிசா மாநிலத்தின் பலசோர் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்ட தனுஷ் பீரங்கி, பாலைவன பிரதேசமான பொக்ரானில் இறுதியாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதுவும் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, தனுஷ் பீரங்கியை இந்திய ராணுவத்தில் சேர்க்க வழி பிறந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில், 12 தனுஷ் பீரங்கிகள், ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளன.

Next Story