8-ம் வகுப்பு வரை படித்த மந்திரிக்கு உயர் கல்வி இலாகா குமாரசாமி முடிவால் சர்ச்சை


8-ம் வகுப்பு வரை படித்த மந்திரிக்கு உயர் கல்வி இலாகா குமாரசாமி முடிவால் சர்ச்சை
x
தினத்தந்தி 9 Jun 2018 11:15 PM GMT (Updated: 9 Jun 2018 9:12 PM GMT)

கர்நாடகாவில் 8-ம் வகுப்பு வரை படித்த மந்திரிக்கு உயர் கல்வி இலாகாவை ஒதுக்கிய குமாரசாமி முடிவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகாவில், காங்கிரசுடன் இணைந்து ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமி ஆட்சி அமைத்துள்ளார். கடந்த 6-ந் தேதி, தனது மந்திரிசபையை விஸ்தரித்தார். அந்த புதிய மந்திரிகளுக்கு நேற்றுமுன்தினம் இரவு இலாகா ஒதுக்கீடு செய்தார். அதில், சாமுண்டீஸ்வரி தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை தோற்கடித்த ஜனதாதளத்தை (எஸ்) சேர்ந்த ஜி.டி.தேவேகவுடாவுக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கப்பட்டது.

அவர் 8-ம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளதால், இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய இலாகாக்களை எதிர்பார்த்த தனக்கு உயர் கல்வி இலாகா ஒதுக்கியதற்கு ஜி.டி.தேவேகவுடாவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமியிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு குமாரசாமி கூறியதாவது:-

நான் பி.எஸ்சி. மட்டுமே படித்துள்ளேன். நான் முதல்-மந்திரியாக இருக்கவில்லையா? சிலருக்கு குறிப்பிட்ட இலாகாக்கள் மீது ஆசை இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு துறையிலும் திறம்பட செயல்பட வாய்ப்பு இருக்கிறது. உயர் கல்வித்துறையை விட சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள துறை வேறு இருக்கிறதா? குறிப்பிட்ட துறைகளுக்கு கிராக்கி இருந்தபோதிலும், கட்சி நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்.

முதலில், மந்திரி ஆவதற்கு ஆசைப்படுவது, பிறகு, குறிப்பிட்ட இலாகாக்களுக்கு ஆசைப்படுவது எல்லாம் பொதுவானதுதான்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story