லஞ்சம் வாங்கிய கடற்படை அதிகாரி கைது; ரூ.5 கோடி பறிமுதல்


லஞ்சம் வாங்கிய கடற்படை அதிகாரி கைது; ரூ.5 கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 2 July 2018 11:41 PM GMT (Updated: 2 July 2018 11:41 PM GMT)

லஞ்சம் வாங்கிய கடற்படை அதிகாரி கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து சுமார் ரூ. 5 கோடியை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதுடெல்லி, 

கொல்கத்தாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் புஷ்கர் பாசின் மற்றும் அஜ்மீர் நகரில் வசிக்கும் பிரபுல் ஜெயின் ஆகிய இருவருக்கும் கொச்சி கடற்படையை சேர்ந்த மாலுமிகளுக்கு தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு ரூ.177.33 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் கிடைத்தது.

ஆனால் கொச்சி கடற்படை தளத்தின் தலைமை பொறியாளராக பணியாற்றி வரும் ராகேஷ் குமார் கார்க், லஞ்சம் கொடுத்தால்தான் தொடர்ந்து ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியும் என்று கறாராக கூறியுள்ளார். இந்த நிலையில் புஷ்கர் பாசின் ரூ.83 லட்சத்தை அவருக்கு, லஞ்சமாக கொடுத்துள்ளார். பிரபுல் ஜெயின் தனது உறவினர் மூலம் ரூ.38 லட்சம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுபற்றி சி.பி.ஐ.க்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லி, கொச்சி, அஜ்மீர், கொல்கத்தா உள்பட 20 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடற்படை அதிகாரி ராகேஷ் குமார் கார்க்கிற்கு லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் ரூ.1 கோடியே 21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.3.97 கோடி மற்றும் 6 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக கடற்படை அதிகாரி ராகேஷ்குமார் கார்க் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story