நான் மிகப்பெரிய மன்னன் அல்ல: பிரதமர் மோடி பேட்டி


நான் மிகப்பெரிய மன்னன் அல்ல: பிரதமர் மோடி பேட்டி
x
தினத்தந்தி 3 July 2018 11:45 PM GMT (Updated: 3 July 2018 10:03 PM GMT)

நான் மிகப்பெரிய மன்னனோ அல்லது ஏகாதிபத்திய எண்ணம் கொண்ட ஆட்சியாளனோ அல்ல என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி, 

சுயராஜ்யா என்னும் ஆன்லைன் இதழுக்கு பிரதமர் மோடி நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

குறிப்பாக, அடுத்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரசார கூட்டங்களில் மோடியின் உயிருக்கு குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவருக்கு உயரிய பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை வரைவு வழிகாட்டுதல்களை வரையறுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி கூறுகையில், “நான் எங்கு பயணம் செய்தாலும் பல்வேறு சமூகம் மற்றும் அனைத்து வயதினரையும் கொண்ட ஏராளமான மக்களை சந்திக்கிறேன். தெருக்களிலும், வீதிகளிலும் திரண்டு மக்கள் எனக்கு வரவேற்பு அளிக்கும்போது என்னால் காரில் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.

ஏனென்றால் நான் மிகப்பெரிய மன்னனோ இல்லை. ஏகாதிபத்திய எண்ணம் கொண்ட ஆட்சியாளனோ அல்ல. அப்படி இருந்தால்தான் மக்களின் அன்பும், அரவணைப்பும் இன்றி ஒதுங்கி இருக்க முடியும். நான் அப்படிப்பட்டவன் அல்ல. அதனால் மக்களின் அன்பு எப்போதும் என்னை பாதிக்காது. அவர்கள் அளிக்கும் ஆதரவு எனக்கு மிகுந்த பலத்தை தருகிறது” என்று பதில் அளித்தார்.

எதிர்க்கட்சிகள் தன்னை கடுமையாக தாக்கிப் பேசுவது பற்றிய கேள்விக்கு, “எதிர்க்கட்சிகளுக்கு மோடியை எதிர்ப்பது தவிர வேறு எந்த குறிக்கோளும் கிடையாது. மோடி மீது வெறுப்பை காட்டுவதுதான் அவர்களது ஒரே நோக்கம். முக்கிய எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தூண்போன்ற நிலையில் இருந்து விலகி, மக்களால் புறக்கணிக்கப்பட்ட மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் குறியாக உள்ளது. அது(காங்கிரஸ்) தற்போது பிராந்திய கட்சியாகவும் மாறிவிட்டது. கர்நாடகாவில் மக்களின் தீர்ப்பை காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் திருடிக் கொண்டதே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், “அடுத்த நாடாளுமன்ற தேர்தலின்போது சிறந்த நிர்வாகம், வளர்ச்சி என்பது ஒரு பக்கமும், எதிர்க்கட்சிகளின் குழப்பமான அரசியல் என்பது மற்றொரு பக்கமாகவும் நின்று தேர்தலை சந்திக்கும் நிலை உள்ளது. எதிர்க்கட்சிகள் தங்களின் தனிப்பட்ட செல்வாக்கை தக்க வைக்கவும், அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் மட்டுமே மெகா கூட்டணி அமைத்துள்ளன. எனினும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மத்தியில் ஆட்சி அமைக்க மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்.

Next Story