ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் மூட நம்பிக்கையால் தற்கொலை செய்தது சிசிடிவி காட்சி மூலம் உறுதியானது


ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் மூட நம்பிக்கையால் தற்கொலை செய்தது சிசிடிவி காட்சி மூலம் உறுதியானது
x
தினத்தந்தி 4 July 2018 2:05 PM GMT (Updated: 4 July 2018 2:05 PM GMT)

புதுடெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் மூட நம்பிக்கையால் தற்கொலை செய்தது சிசிடிவி காட்சி மூலம் உறுதியாகியுள்ளது.


 புதுடெல்லி,

 
டெல்லியின் புராரி பகுதியில் பவனேஷ் (வயது 50), அவரது சகோதரர் லலித் (45) ஆகிய இருவரும் தங்கள் தாய் நாராயண் தேவி (77) மற்றும் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பலசரக்கு வியாபாரம் மற்றும் தச்சுத்தொழில் செய்து வந்த இவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் இறந்து கிடந்தது ஞாயிறு காலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி 2 குழந்தைகள், 7 பெண்கள் உள்பட 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதில் நாராயண் தேவி தரையில் பிணமாக கிடந்த நிலையில், மற்ற 10 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர். 

அவர்களது வாய் டேப்பால் ஒட்டப்பட்டு இருந்ததுடன், முகம் துணியால் மூடப்பட்டு இருந்தது. இதற்கு ஒரே போர்வையில் இருந்து துணியை வெட்டி பயன்படுத்தப்பட்டு இருந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார், இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர்களின் வீட்டில் போலீசார் ஆய்வு செய்த போது, அங்கே அவர்கள் சிறிய கோவிலை கட்டி வழிபட்டு வந்தது தெரியவந்தது. அவர்கள் வழிபாட்டு முறை வித்தியாசமாக இருந்ததை கண்டுபிடித்த போலீசார், இது மூட நம்பிக்கையால் நிகழ்ந்த தற்கொலையாக இருக்கலாம் என்றனர். அவர்களது வீட்டில் கைப்பற்றிய சில கையேடுகளும் இதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது.

அந்த குறிப்புகளில் அவர்கள், ‘ஒருவர் இறக்கமாட்டார்’ எனவும், ஆனால் அதைவிட ‘பெரிய காரியத்தை’ செய்வார் எனவும் எழுதப்பட்டு இருந்தது. மேலும் ‘சொர்க்கத்தை அடையும் வழி’ மற்றும், தற்கொலை செய்வதற்கான வழிகளையும் அதில் எழுதி இருந்தனர். அதன்படி, தற்கொலை செய்வதற்கு அனைவரும் நாற்காலியை பயன்படுத்த வேண்டும். கை, கால்கள், வாய், கண்கள் கட்டப்பட்டு இருந்தால்தான் சொர்க்கத்தை அடைய முடியும். தற்கொலை செய்யும்போது விளக்குகள் குறைந்த வெளிச்சத்தில் இருக்க வேண்டும், நள்ளிரவு 12&1 மணிக்குள் தற்கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் அதில் எழுதப்பட்டு இருந்தது. 

எனவே இது மதவழிபாட்டு அடிப்படையிலான தற்கொலை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என போலீசார் கூறினர். இதற்கிடையே உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகள் உள்பட 6 பேரின் பிரேத பரிசோதனை முடிவடைந்தது. அந்த அறிக்கையை போலீசார் பெற்றனர். அதில் உயிரிழக்குமுன் மூச்சுத்திணறலோ அல்லது உயிருக்கு போராடியதற்கான அறிகுறிகளோ தென்படவில்லை என கூறப்பட்டு உள்ளது. 
எனவே இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து விரிவான விசாரணைகள் தொடங்கியது. 

 ஆன்மா வெளியேற குழாய்கள்

இறந்தவர்களின் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் நேற்று தீவிரமாக சோதனை போட்டனர். அப்போது வீட்டுக்குள் இருந்து 11 குழாய்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த குழாய்கள் வேறு எந்த பொருளுடனும் இணைக்கப்படவும் இல்லை. 11 பேரும் இறந்து கிடந்த அறையில் இருந்துதான் இந்த குழாய்கள் வெளியே நீண்டுகொண்டு இருந்தன. இது குறித்த விவரங்கள் அவர்கள் வைத்திருந்த குறிப்பேடுகளிலும் காணப்பட்டது. அதாவது, தாங்கள் இறந்த பின் தங்களது ஆன்மா சொர்க்கத்துக்கு போக இந்த குழாய்கள் உதவும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதைப்பற்றியும் போலீசார் விசாரித்தனர். 

மேலும் எந்த நாளில் தற்கொலை செய்தால் சொர்க்கத்துக்கு போக முடியும்? என்பது போன்ற குறிப்புகளும் அந்த குறிப்பேட்டில் இருந்ததை பார்த்த போலீசார், இந்த நவீன யுகத்திலும் இப்படியெல்லாம் மூட நம்பிக்கையுடன் மக்கள் இருக்க முடியுமா? என குழம்பினர். 

மூடநம்பிக்கை

போலீஸ் வீட்டில் ஒரு அறையை சோதனையிட்ட போது 2007-ம் ஆண்டு அக்குடும்பத்தின் தலைவர் இறந்தபோது எழுதப்பட்ட கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட போது வீட்டின் கதவு திறந்துதான் இருந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், “நாங்கள் இவ்விவகாரத்தில் இரண்டு கோணங்களில் விசாரித்து வருகிறோம், ஒன்று குடும்பத்தினர் தங்களை காப்பாற்றும் சக்தி வாசல் வழியாக வரும் என்று நினைத்து இருக்கலாம், அல்லது 12-வததாக ஒருவர் அங்கிருந்து இருக்கலாம்,” என்றார்கள்.  வீட்டில் கைப்பற்றிய ஆதாரங்கள் மற்றும் விசாரணைத் தகவல்கள் அனைத்தும் போலீசை குழப்பும் விதமாகவே இருந்தது.

வீட்டில் கைப்பற்றப்பட்ட அனைத்து கடிதங்களும் உயிரிழந்த லலித் பாதியாவால் எழுதப்பட்டுள்ளது என்பதும், அவரே இந்த கொலைகளுக்கு முக்கியமாக இருந்துள்ளார் என்பதும் தெரிந்தது. லலித் பாதியா, இறந்துபோன தந்தையிடம் பேசிவருவதாகவே கூறியுள்ளார், இதனை அப்பகுதி மக்களும் உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே வீட்டை ஆய்வு செய்த போலீஸ் அதிகாரி ஒருவர் பேசுகையில், குடும்பத்தினர் பகிர்வு மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தெரிகிறது. உயிரிழந்த லலித் பாதியா இறந்து போன தந்தையிடம் பேசி வந்ததாக கூறியுள்ளார். இதனை குடும்பத்தில் உள்ள அனைவரும் நம்பியுள்ளனர். பாதியா தனது வீட்டுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என பக்கத்து வீட்டினர் ஒருவர் தெரிவித்துள்ளார். அக்கம்பக்கத்தினரிடம் அன்பாக பழகினாலும், வீட்டு விவரங்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பதில்லை.

 அவர்கள் அதீத ஆன்மிக நம்பிக்கையில் மூழ்கி இருந்துள்ளனர். அங்கு அவர்களுடைய திட்டங்களை பார்க்கையில்  மூட நம்பிக்கையில் மூழ்கியிருந்ததும், தற்கொலைக்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்ததும் தெரிகிறது என கூறியிருந்தார். 

சிசிடிவி காட்சி

இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் மூட நம்பிக்கையால் தற்கொலை செய்தது பக்கத்துவீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சி மூலம் உறுதியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்க்கையில் இதில் பிறரது குற்றம் எதுவும் இல்லை என்பது தெரிகிறது எனவும் போலீஸ் தெரிவித்துள்ளது. சிசிடிவி காட்சியின்படி 10 மணியளவில் அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் 5 நாற்காலிகளை எடுத்து வந்துள்ளார், சிறுவர்கள் கயிறு எடுத்து வந்துள்ளனர். அவர்கள் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற மூடநம்பிக்கையிலே இதனை செய்துள்ளனர் என்பதை காட்சிகள் உறுதிபடுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story