ஜாகீர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை - வெளியுறவுத்துறை


ஜாகீர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை - வெளியுறவுத்துறை
x
தினத்தந்தி 4 July 2018 3:13 PM GMT (Updated: 4 July 2018 3:13 PM GMT)

ஜாகீர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.



புதுடெல்லி,

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டுதல், பயங்கரவாத நடவடிக்கை தடை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து தப்புவதற்கு வெளிநாட்டில் இருந்துவருகிறார். ஜாகீர் நாயக் வெறுக்கத்தக்க பேச்சுகள் மூலம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டில் விசாரிக்க வேண்டியது உள்ளது என இந்திய அரசு, கடந்த ஜனவரி மாதம் அவரை நாடு கடத்தல் மலேசிய அரசுக்கு முறையான கோரிக்கையை முன்வைத்தது.

 இந்நிலையில் அவர் இன்று மும்பை திரும்புகிறார் என செய்திகள் வெளியாகியது. தேசிய புலனாய்வு அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ராகுல் திரிபா பேசுகையில், ''ஜாகீர் நாயக் இந்தியா திரும்புவது குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை. விசாரித்து வருகிறோம். தேசிய புலனாய்வு அமைப்பு ஜாகீர் நாயக்கை தேடிவருகிறது'' என தெரிவித்தார்.

இதற்கிடையே மும்பை திரும்புவதாக வெளியான தகவலை மறுத்த ஜாகீர் நாயக், தன் மீதான விசாரணை நேர்மையாக, நியாயமாக நடக்கும், தனக்குப் பாதுகாப்பு இருக்கும் என்று நம்பும்போது இந்தியா வருகிறேன் என விளக்கமளித்தார். இந்நிலையில் ஜாகீர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என வெளியுறவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது. மலேசிய அதிகாரிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் பெற வேண்டியது உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

Next Story