கள்ள நோட்டுகளை அச்சடித்ததாக கேரள டி.வி. நடிகை தாய்-தங்கையுடன் கைது: ரூ.8 கோடி அளவுக்கு புழக்கத்தில் விட்டது அம்பலம்


கள்ள நோட்டுகளை அச்சடித்ததாக கேரள டி.வி. நடிகை தாய்-தங்கையுடன் கைது: ரூ.8 கோடி அளவுக்கு புழக்கத்தில் விட்டது அம்பலம்
x
தினத்தந்தி 4 July 2018 10:15 PM GMT (Updated: 4 July 2018 9:09 PM GMT)

கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக கேரள டி.வி. நடிகை தாய், தங்கையுடன் கைது செய்யப்பட்டார்.

இடுக்கி, 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் பெரிய பையில் 200 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை சோதனை செய்தபோது அவை கள்ள ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது. அவற்றில் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 200 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தன.

விசாரணையில் அதை கொண்டுவந்தவர்கள் ரவீந்திரன் (வயது 58), லியோ (44), கிருஷ்ணகுமார் (46) என்பதும், கள்ள ரூபாய் நோட்டுகளை கைமாற்ற கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் கள்ள ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். கள்ள ரூபாய் நோட்டுகளை எங்கிருந்து கடத்தி வந்தனர். யாரிடம் கொடுப்பதற்காக கொண்டு வந்தனர் என்பது குறித்து விசாரணையை தொடங்கினர். அப்போது கள்ள நோட்டு கும்பல் பின்னணியில் கொல்லம் முளகாடகம் பகுதியை சேர்ந்த டி.வி. நடிகை ஒருவருக்கு தொடர்பு இருப்பது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதையடுத்து அவர் வசிக்கும் சொகுசு பங்களாவை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அவருடைய வீட்டுக்கு சந்தேகப்படும் படியாக நபர்கள் வந்து செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலையில் போலீசார் அந்த பங்களாவுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

அப்போது அங்கு கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த பங்களாவில் வசித்த மலையாள டி.வி. நடிகை சூர்யா (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய தாயார் ரமாதேவி (56), தங்கை சுருதி (29) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதில் நடிகை சூர்யா மலையாள டி.வி. தொடர்களில் நடித்துள்ளார்.

டி.வி. நடிகை சூர்யா மற்றும் அவரது தாயார், தங்கை ஆகியோர் அந்த பங்களாவில் தங்கியிருந்து கம்ப்யூட்டர், ஸ்கேனர் உள்பட நவீன கருவிகள் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இதையடுத்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய ஸ்கேனர் கருவிகள், கம்ப்யூட்டர், பிரிண்டர் எந்திரம், மை, ரிசர்வ் வங்கியின் போலி சீல் மற்றும் ரூ.57 லட்சம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கைது செய்யப்பட்ட ரமாதேவியின் கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் கொலை செய்யப்பட்டார். இதனால் ரமாதேவி தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். ரமாதேவிக்கு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் தொடர்பு இருந்துள்ளது. பிடிபட்ட நடிகை உள்பட 3 பேருக்கும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதே குறிக்கோள். இதற்காக கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இவர்களிடம் ரூ.1 லட்சம் அசல் ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அதற்கு பதிலாக ரூ.3 லட்சம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுப்பார்கள். கடந்த 8 மாதங்களாக அங்கு தங்கியிருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வந்துள்ளனர்.

அச்சடிக்கப்படும் கள்ள நோட்டுகளை கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட தென் மாநிலங்களில் அதிகளவில் புழக்கத்தில் விட்டுள்ளனர். இதுவரை ரூ.8 கோடி வரை கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் சர்வதேச கள்ள நோட்டு கும்பலுடனும் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் வந்துள்ளது. எனவே அதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story