மத்திய அரசு சம்பா பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளித்தது வரலாற்று மிக்க சாதனை - சிவராஜ் சிங் சவுகான்


மத்திய அரசு சம்பா பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளித்தது வரலாற்று மிக்க சாதனை - சிவராஜ் சிங் சவுகான்
x
தினத்தந்தி 5 July 2018 10:27 AM GMT (Updated: 5 July 2018 10:27 AM GMT)

மத்திய அரசு சம்பா பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளித்தது வரலாற்று மிக்க சாதனை என்று சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். #ShivrajSinghChouhan


போபால்,

விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தானியங்களை, குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் மத்திய அரசின் இந்திய உணவு கழகம் நேரடியாக கொள்முதல் செய்து, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வினியோகம் செய்து வருகிறது. இதற்காக உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்கிறது.

நாடு முழுவதும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.

முன்னதாக, விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்தி செலவை விட 1½ மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றும் நோக்கில் கடந்த பட்ஜெட்டிலும் இதற்கான அறிவிப்பு வெளியானது.

அதன்படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபைக்குழு, 14 சம்பா (கரீப்) பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் இது குறித்து மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:

பிரதமர் மோடிக்கு நன்றி கூற விரும்புகிறேன். சம்பா (கரீப்) பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளித்தது வரலாற்று மிக்க சாதனை. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கான மிகப்பெரிய முடிவு. 

இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும். இந்த முடிவு 2022-ல் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாகும் பிரதமர் மோடியின் கனவு நிறைவேறும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story