அதிக வேகத்தில் சென்ற அலுவலக கார்: கேரள கவர்னர் அபராதம் செலுத்தினார்


அதிக வேகத்தில் சென்ற அலுவலக கார்: கேரள கவர்னர் அபராதம் செலுத்தினார்
x
தினத்தந்தி 5 July 2018 11:45 PM GMT (Updated: 5 July 2018 9:43 PM GMT)

அலுவலக கார் அதிக வேகத்தில் சென்றதால் கேரள கவர்னர் சதாசிவம் அதற்கான அபராத தொகையை செலுத்தினார்.

திருவனந்தபுரம், 

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளையம்பலம்-கவுடியார் சாலை எப்போதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகும். இங்கு வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதை கண்காணிக்க போக்குவரத்து போலீசார் அதிநவீன கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதன் மூலம் விதிமீறலில் ஈடுபடும் ஏராளமான வாகன ஓட்டிகள் தினந்தோறும் போலீசில் சிக்கி வருகின்றனர்.

இந்த சாலையில்தான் கேரள மாநில கவர்னரின் அலுவலக இல்லமும் அமைந்துள்ளது. அங்கு தமிழகத்தை சேர்ந்தவரும், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியுமான சதாசிவம், தற்போது கவர்னராக பதவி வகித்து வருகிறார்.

அவரது அலுவலகத்தை சேர்ந்த கார் ஒன்று கடந்த ஏப்ரல் 7-ந் தேதி எரிபொருள் நிரப்புவதற்காக வெளியே புறப்பட்டது. அந்த காரை இயக்கிய டிரைவர் அதிக வேகத்தில் இயக்கியதாக தெரிகிறது. இதை கண்டுபிடித்த போலீசார், அந்த காருக்கு ரூ.400 அபராதம் விதித்தனர். இதற்கான கடிதம் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதை அறிந்த கவர்னர் சதாசிவம் எவ்வித தயக்கமும் இன்றி, அந்த தொகை செலுத்துமாறு தனது அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி கவர்னரின் செயலாளர் அந்த தொகையை செலுத்தினார்.

சம்பவத்தின் போது கவர்னர் அந்த வாகனத்தில் இல்லாதிருந்தும், அபராத தொகையை செலுத்திய கவர்னரின் நேர்மை கேரள மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. இதை ‘நேர்மறையான நடவடிக்கை’ என பாராட்டியுள்ள மாநில போக்குவரத்து கமிஷனர், இது சாதாரண மக்களும் போக்குவரத்து விதிகளை மதிக்க உதவும் என தெரிவித்தார்.

Next Story