காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடந்தது


காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடந்தது
x
தினத்தந்தி 5 July 2018 11:30 PM GMT (Updated: 5 July 2018 9:43 PM GMT)

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் முதல் கூட்டம், டெல்லியில் நடந்தது. இதில், அணைகளில் ஆவியாகும் நீரின் அளவை கணக்கிட வானிலை ஆய்வுத்றையை நாடுவது என முடிவு செய்யப்பட்டது.

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவையும் மத்திய அரசு அமைத்தது. அதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், டெல்லியில் கடந்த 2-ந் தேதி நடந்தது.

இடைக்கால தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழகத்துக்கு இந்த மாதத்துக்காக 31.24 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் முதல் கூட்டம் 5-ந் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி டெல்லியில் மத்திய நீர் ஆணைய அலுவலகத்தில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். தமிழக உறுப்பினரான நீர்வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர் ஆர்.செந்தில்குமார், புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் கேரளா, கர்நாடகம், மத்திய அரசின் பிரதிநிதிகள் என காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 8 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம், உதவி தலைவர் கே.எஸ்.ராம்குமார் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் காலை 11.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.45 மணிக்கு முடிந்தது.

அதையடுத்து காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் நவீன் குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் மிகவும் சுமுகமான முறையில் நடந்தது. கூட்டம் துவங்கியதும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒழுங்காற்றுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அவை பற்றியும் உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான செயல்வடிவம் பற்றி விளக்கப்பட்டது. இந்த குழுவுக்கு உறுப்பினர் மாநிலங்கள் மற்றும் தொடர்பு உடைய அரசுத்துறைகள் அளிக்கவேண்டிய தகவல்கள் பற்றிய வழிகாட்டுதல்கள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.

இன்றைய (நேற்றைய) கூட்டத்தில் காவிரி படுகையில் கிடைக்கும் மழைநீர் அளவு தொடர்பான சூழ்நிலை, அப்பகுதிகளில் கிடைக்கும் மழைநீர் புள்ளி விவரங்களை சேகரித்தல், சாகுபடி மற்றும் அறுவடை தகவல்கள், ஒவ்வொரு அணைகளின் நீர் இருப்பு மற்றும் திறப்பு குறித்த மாதாந்திர அடிப்படையிலான தகவல்களை சேகரிப்பது தொடர்பான நடைமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், வானிலை ஆய்வுத்துறை, மத்திய நீர் ஆணையம் ஆகியவற்றிடம் இருந்து தேவைப்படும் புள்ளி விவரங்களை சேகரிப்பது தொடர்பான கால அளவு, இடைவெளி ஆகியவற்றை முடிவு செய்தல், ஒவ்வொரு உறுப்பினர் மாநிலமும் மாதாந்திர அடிப்படையில் வழங்க வேண்டிய தகவல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதற்கான பல்வேறு வரைவு படிவங்கள் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டன. இவற்றின் மீதான கருத்துக்களை அனைத்து உறுப்பினர்களும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு வரும் 16-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. காவிரி படுகையில் உள்ள அணைகளில் ஆவியாகும் நீரின் அளவை தீர்மானிப்பது குறித்து இந்திய வானிலை ஆய்வுத் துறையிடம் ஆலோசனை பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதைக் கணக்கு எடுக்கும் வகையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிடம் உள்ள கருவிகள் குறித்தும் தற்போது கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் குறித்தும் குழுவுக்கு தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த தகவல்களின் அடிப்படையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்திய வானிலைத்துறை 2 வாரங்களில் தங்கள் பரிந்துரையை அளிக்கும். அந்த பரிந்துரைகள் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் அடிப்படையில் குழுவின் பரிந்துரைகள் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்யப்படும். இது தொடர்பான இறுதி முடிவை காவிரி மேலாண்மை ஆணையம் எடுக்கும்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டத்தை வரும் 19-ந் தேதி டெல்லியில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பார்வைக்கு வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story