விளைச்சலை அதிகரிக்க மந்திரங்கள் உச்சரியுங்கள்; விவசாயிகளுக்கு பரிந்துரைத்த கோவா மந்திரி!


விளைச்சலை அதிகரிக்க மந்திரங்கள் உச்சரியுங்கள்; விவசாயிகளுக்கு பரிந்துரைத்த கோவா மந்திரி!
x
தினத்தந்தி 6 July 2018 2:05 AM GMT (Updated: 6 July 2018 2:05 AM GMT)

விளைச்சலை அதிகரிக்க மந்திரங்கள் உச்சரியுங்கள் என்று விவசாயிகளுக்கு பரிந்துரை செய்த மந்திரியை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

பானஜி,

கோவாவில் பாஜக தலைமையிலாக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மனோகர் பாரிக்கர் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். கூட்டணி கட்சியான கோவா முற்போக்கு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய் விவசாய துறை மந்திரியாக உள்ளார்.

கோவாவைச் சேர்ந்த, சிவ யோகா பவுண்டேஷன் என்ற அமைப்பு, அண்டவெளி விவசாயம் என்ற புதிய விவசாய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த மந்திரி விஜய் சர்தேசாய் பேசியதாவது:

அண்டவெளி விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை; அவை ரசாயன உரங்கள் கலக்காமல் நச்சுத்தன்மை அற்றதாக இருக்கும். விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் நின்று தொடர்ந்து 30 நிமிடங்கள் வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். 

இப்படி சொல்லும்போது அதிலிருந்து உருவாகும் அண்ட சக்தியால் நெற்பயிர்கள் அமோகமாக விளைச்சல் கொடுக்கும். இதற்கு சிவயோக விவசாயம் என்று பெயர். இந்த முறையினால் ஏராளமான விவசாயிகள் பலனடைந்து உள்ளனர். இது எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். 

கோவா மந்திரியின் இந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மந்திரியின் கருத்தை கேலி செய்யும் வகையிலும், நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 


Next Story