டெல்லி 11 பேர் தற்கொலைக்கு பின்னால் பெரிய சதி உள்ளது - மூத்த மகன் தினேஷ் சிங்


டெல்லி 11 பேர் தற்கொலைக்கு  பின்னால் பெரிய சதி உள்ளது - மூத்த மகன் தினேஷ் சிங்
x
தினத்தந்தி 6 July 2018 10:57 AM GMT (Updated: 6 July 2018 10:57 AM GMT)

கடவுளை அடையவேண்டும் என்ற மூடநம்பிக்கையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறுவதை இறந்த குடும்பத்தைச் சேர்ந்த மூத்த மகன் தினேஷ் சிங் மறுத்துள்ளார். #Burarideaths

புதுடெல்லி

தலைநகர் டெல்லியை உலுக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலையானது நன்றியறிவித்தல் சடங்கின் ஒருபகுதி என விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த தற்கொலை சடங்கினை எஞ்சிய தங்கள் உறவினர்களுடனும் மறுபடியும் செய்து கொள்ள பாட்டியா குடும்பம் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஞாயிறு அன்று நடந்த இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில்  டெல்லி போலீசார் ஈடுபட்டு உள்ளனர். பாட்டியா குடும்பத்தாரின் குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பாட்டியா குடும்பமானது ஒரு வார காலம் நீண்ட நன்றி அறிவித்தல் சடங்கை மேற்கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சடங்கின் ஒருபகுதியாக கயிற்றில் தொங்குதலும் ஒரு சடங்காகவே கருதி பாட்டியா குடும்பத்தினர் செய்துள்ளனர். சடங்குகள் நல்லமுறையில் முடிவுக்கு வந்ததும் எஞ்சிய உறவினர்களுடன் மீண்டும் செய்துகொள்ளவும் திட்டமிட்டிருந்தனர்.

அதில் டினாவின் சகோதரி மமதாவுக்கு இந்த சடங்குகளை செய்ய முடிவு செய்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் மமதாவுக்கு தமது குடும்பத்தாரின் இந்த நன்றி அறிவித்தல் சடங்குகள் தொடர்பில் எதுவும் தெரிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. 

கடந்த 2007 ஆம் ஆண்டு பாட்டியா குடும்பத்தின் முதியவரான போபால் சிங் காலமான பின்னர் சில மாதங்களில் இருந்தே இதுபோன்ற சடங்குகளை தங்கள் குடியிருப்பில் நடத்தி வந்துள்ளனர்.

போபாலின் மரணம் அவரது 3-வது மகனான லலித் பாட்டியாவை கடுமையாக பாதித்திருந்தது. இதன் தாக்கத்தால் லலித் பலமுறை தமது தந்தையின் ஆவி தம்மீது குடிகொண்டுள்ளதாகவும், அவரது வழிகாட்டுதலில் இனிமேல் அனைத்தும் நடைபெறும் எனவும் கூறி வந்துள்ளார். அப்போது பொருளாதார சிக்கலில் விழிபிதுங்கிய பாட்டியா குடும்பத்தாரை தமது ஆலோசனையின்படி முதலீடு செய்ய வைத்து, அதில் பலனையும் பெற்றார் லலித் பாட்டியா. அதில் இருந்தே லலித் பாட்டியா மீதான மதிப்பு அந்த குடும்பத்தில் அதிகரித்தது. அது மட்டுமின்றி அனைவரும் அவரை தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்த்துள்ளனர்.

இந்த நிலையிலேயே 30 வயது பிரியங்காவுக்கு வரன் ஒன்று அமைந்ததும், திருமண நிச்சயதார்த்தம் மிடிந்தது. இதனையடுத்து குடும்பத்தில் நீண்ட காலங்களுக்கு பின்னர் திருமணம் நடைபெற இருப்பதால் 7 நாட்கள் நன்றி அறிவித்தல் சடங்கை உடனே ஏற்பாடு செய்ய லலித் நிர்பந்தித்துள்ளார். ஜூன் 23 ஆம் திகதி முதல் மிக ரகசியமாக குறித்த சடங்குகளை தொடங்கிய பாட்டியா குடும்பம் முதல் 6 நாட்களும் கடைசி நாளுக்கான தாயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது. கடைசி நாள் இரவு நேரத்திலேயே இருக்கைகளும் கயிறும் வாங்கி வந்துள்ளனர். 7-வது நாள் அவர்கள் தூக்குக்கயிறு சடங்கில் ஈடுபடுவார்கள், ஆனால் போபால் சிங் பாட்டியாவின் ஆவி அவர்களை காப்பாற்றும் என மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த காரணத்தை இறந்த குடும்பத்தை சேர்ந்த மூத்த மகன் தினேஷ் சிங் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், எங்கள் குடும்பத்தில் அனைவரும் நன்கு படித்தவர்கள், அவர்கள் மூடநம்பிக்கையால் தற்கொலை செய்திருக்க முடியாது.

அவர்கள் மரணத்துக்கு பின்னால் பெரிய சதி உள்ளது. என் சகோதரி மகள் பிரியங்காவுக்கு கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் ஆன நிலையில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அதே போல மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்தது, அவர்கள் கடவுளுடன் சேர வேண்டும் என்று எப்போதும் கூறவில்லை. குடும்பத்தார் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தான், ஆனால் அதற்காக இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள். தற்கொலை செய்பவர்கள் கதவுகளை மூடி கொள்வார்கள், ஆனால் இவர்கள் இறக்கும்போது கதவுகள் திறந்திருந்தது.

மற்றவர்கள் கூறுவதை நம்பும் போலீஸ் நாங்கள் கூறுவதை கேட்க மறுக்கிறார்கள். அவர்கள் மூடநம்பிக்கையால் தான் இறந்தார்கள் என்றால் அதற்கான பலமான ஆதாரத்தை போலீஸ் எனக்கு தரவேண்டும். அப்படி இல்லையெனில் இது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Next Story