புராரி 11 பேர் தற்கொலை : முக்கிய மூளையாக செயல்பட்ட லலித் பாட்டியா அமானுசிய சக்திகள் மீது ஆர்வம் கொண்டவர்


புராரி 11 பேர் தற்கொலை :  முக்கிய மூளையாக செயல்பட்ட லலித் பாட்டியா அமானுசிய சக்திகள் மீது ஆர்வம் கொண்டவர்
x
தினத்தந்தி 7 July 2018 7:39 AM GMT (Updated: 7 July 2018 7:39 AM GMT)

டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முக்கிய காரணமான லலித்தின் செல்போனை ஆராய்ந்து பார்த்த போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. #Burarideaths

புதுடெல்லி

டெல்லியில் உள்ள புராரி பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர்  கண் மற்றும் வாயை கட்டியவாறு பிணமாக கிடந்த சமபவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 77 வயதான நாராயணி தேவி என்ற மூதாட்டி தனது இரண்டு மகன்கள், மகள்கள், மருமகள்கள், பேத்தி, பேரனுடன் சேர்ந்த கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசிந்து வந்தார். 

நாராயணி தேவியின் மகன்கள் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களின் மளிகை கடை திறக்கப்படாததால் ஊழியர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ளனர். நீண்ட நேரம் தட்டியும் வீடு திறக்கப்படாமல் இருந்ததால், ஜன்னலை உடைத்து வீட்டினுள் நுழைந்து பார்த்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் கண் மற்றும் வாயை கட்டியவாறு வீட்டில் பிணமாக கிடந்தனர். அதன் பின் இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு வந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வீட்டில் இருந்து 10-க்கும் மேற்பட்ட டைரிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் இவர்கள் கடவுளை அடைய வேண்டும் என்பதற்காகவே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இருப்பினும் அனைவரும் படித்தவர்கள் என்பதால், இப்படி மூடநம்பிக்கையின் காரணமாக தற்கொலை செய்திருப்பார்களா ? என்ற கேள்வியும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அருகில் இருக்கும் வீட்டின் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்த போது, குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இருப்பினும் இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், இவர்கள் தற்கொலை செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் லலித் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

லலித் பாட்டியா தான் பேய், ஆவி, ஆன்மா குறித்து தீவிர ஆராய்ச்சியில் இருந்தார் என்றும், கடவுளை அடையும் அவரின் முயற்சியே அனைவரையும் தற்கொலை செய்ய வைத்துள்ளது என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், லலித் பாட்டியாவின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் பேய்களுடன், ஆவிகளுடன் பேசுவது, அவர்களுடன் தொடர்பு கொள்வது எப்படி போன்ற வீடியோக்கள் அதிகம் இருந்தன.

அது தொடர்பான விஷயங்கள், தகவல்கள் அதிகமாகத் தேடப்பட்டுள்ளன. மேலும் ஆவிகளுடன் பேசுவது குறித்த புத்தகங்கள், பேய்கள் குறித்த ஆராய்ச்சியிலும் லலித் பாட்டியா ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனால், பேய்கள், ஆவிகள் குறித்த தீவிர ஆராய்ச்சியின் காரணமாகவும், மூடநம்பிக்கையினாலும் குடும்ப உறுப்பினர்களை தற்கொலைக்குத் தூண்டி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் 11 பேரும் சாப்பிட்ட இரவு சாப்பாட்டில் ஏதேனும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த அறிக்கை இன்னும் 10 நாட்களில் வந்துவிடும். அந்த அறிக்கை கிடைத்தால், விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் என்று கூறியுள்ளனர்.

Next Story