கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை


கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை
x
தினத்தந்தி 7 July 2018 11:00 PM GMT (Updated: 7 July 2018 10:20 PM GMT)

கர்நாடக கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை, நேற்று காலை வரை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது.

அந்தப்பகுதிகளில் நேற்றும் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாது கனமழை கொட்டி வருவதால் சாலைகளிலும் மழைநீர் வெள்ளம்போல கரைபுரண்டு ஓடுகிறது. மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விடிய, விடிய மழை கொட்டி தீர்த்ததால், நேற்று குடகு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஸ்ரீவித்யா உத்தரவிட்டார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி, பாகமண்டலா, விராஜ்பேட்டை, மடிகேரி, கோணிகொப்பா, சித்தாப்புரா, சுண்டிகொப்பா, சோமவார்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,505 கனஅடியாக இருந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 3,483 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் (முழுகொள்ளளவு-124.80 அடி) 108.82 அடியாக இருந்தது.

குடகு மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் கபினி அணைக்கும் நேற்று மாலை நீர்வரத்து அதிகமானது. அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வந்தது. அதே வேளையில் அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,282.50 (கடல் மட்டத்தில் இருந்து) அடியாக இருந்தது.

சிக்கமகளூரு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக சிருங்கேரி, கொப்பா, என்.ஆர்.புரா, மூடிகெரே ஆகிய பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால், துங்காபத்ரா, ஹேமாவதி ஆகிய ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3 ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்வதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மழைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடக கடலோர மாவட்டங்கள், சிக்கமகளூரு, குடகு ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story