ராமரால் கூட பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது - பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்


ராமரால் கூட பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது - பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்
x
தினத்தந்தி 8 July 2018 9:40 AM GMT (Updated: 8 July 2018 9:40 AM GMT)

ராமரால் கூட பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது என பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

பாலியா, 

சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் உத்தரபிரதேச மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், இப்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

இன்று இந்து கடவுள் ராமர் பூமியில் இருந்தாலும், இப்போது நடக்கிற பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்களை தடுக்க முடியாது, எனென்றால் இன்றைய உலகம் அப்படி என பேசியுள்ளார் சுரேந்திர சிங்.

உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் இருந்து வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள் பாலியல் சித்தரவதை செய்யும் காட்சிகள் அதில் இடம்பெற்று இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் சுரேந்திர சிங் இதுபோன்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். “ஒவ்வொருவரையும் நம்முடைய குடும்பத்தில் ஒருவர் என்றும், நம்முடைய சகோதரிகள் என்றும் கருதவேண்டும் என்பதே நம்முடைய பணியாகும். நல்ல நடத்தையின் வாயிலாகவே நாம் இதனை தடுக்க முடியும். இதுபோன்ற குற்றங்களை தடுப்பதில் அரசியலமைப்பு திறனாக இருக்காது.

 கொடூரமான குற்றவாளிகள் போலீஸ் என்கவுண்டர்களில் சமூகத்தைவிட்டு நீக்கப்பட்டு விட்டார்கள், ஆனால் பாலியல் பலாத்கார குற்றவாளிகளை இதுபோன்று நடத்த முடியாது. அவர்களை சட்டத்தின்படி சிறைக்குதான் அனுப்பப்படுவார்கள். பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த குழந்தைகள் மத்தியில் ஒழுக்கத்தை கற்பித்தல் என்பது அனைவருடைய பணியாகும்,” என கூறியுள்ளார். சுரேந்திர சிங் ஏற்கனவே மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை ராவணன் தங்கை சூர்பனகை என்றும் பிரதமர் மோடியை இந்து கடவுள் ராமனின் அவதாரம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். 

Next Story