பூடானில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்; 2 பேர் கைது


பூடானில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 July 2018 11:15 PM GMT (Updated: 8 July 2018 10:55 PM GMT)

பூடானில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகளை மேற்கு வங்காளத்தில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

புதுடெல்லி, 

சீனா, வங்கதேசம், மியான்மர், பூடான் போன்ற நாடுகளில் இருந்து, மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நோக்கில் வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரக (டி.ஆர்.ஐ.) அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பூடானில் இருந்து சிலர் தங்கம் கடத்தி வருவதாக நேற்று முன்தினம் டி.ஆர்.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேற்கு வங்காளத்தின் சிலிகுரி மாவட்டத்தில் அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். புல்பாரி பகுதியில் வந்த ஒரு காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அந்த காரில், தலா 1 கிலோ எடை கொண்ட 10 தங்கக்கட்டிகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் இருந்த 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது, இந்த தங்கக்கட்டிகளை ஜெய்கான்-பெண்ட்சொல்லிங் எல்லை வழியாக கடத்தி வந்ததாகவும், பீகாரின் முசாபர்நகருக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது. இந்த தங்கக்கட்டிகளை பெண்ட்சொல்லிங் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து, பூடானை சேர்ந்த சிலர் கொடுத்து விட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.3.18 கோடி ஆகும். இந்த கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதியும் சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 32 கிலோ தங்கக்கட்டிகளை சிலிகுரி அருகே வைத்து டி.ஆர்.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 152 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story