நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: தேசிய சட்ட ஆணையம் 2-வது நாளாக ஆலோசனை


நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: தேசிய சட்ட ஆணையம் 2-வது நாளாக ஆலோசனை
x
தினத்தந்தி 9 July 2018 12:30 AM GMT (Updated: 9 July 2018 12:12 AM GMT)

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை குறித்து தேசிய சட்ட ஆணையம் நேற்று 2-வது நாளாக கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

புதுடெல்லி, 

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ள தேசிய சட்ட ஆணையம், இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு அறிய முடிவு செய்தது.

இது தொடர்பான 2 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள சட்ட ஆணைய அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று 2-வது நாளாக சட்ட ஆணையத்தின் தலைவர் பல்பீர் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

நேற்றைய கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கலந்து கொண்ட திருச்சி சிவா எம்.பி. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு தங்கள் கட்சியின் எதிர்ப்பை தெரிவித்தார்.

இதுபற்றி பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விஷயத்தில் தி.மு.க.வின் நிலை என்ன? என்பது பற்றி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு ஒரு கடிதம் தந்துள்ளார். அந்த கடிதத்தை நான் வழங்கி தி.மு.க.வின் நிலையை விளக்கினேன்.

ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை தி.மு.க. கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவில் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி மாநில அரசை மத்திய அரசு எந்த நேரத்திலும் கலைக்கலாம் என்ற நிலை உள்ளது. சில வழக்குகளில் தீர்ப்பு மாறி வந்திருந்தாலும் கூட இந்த பிரிவை எந்த நேரத்திலும் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

மேலும் மக்களவையும் தொடர்ந்து 5 ஆண்டுகள் செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதற்கு முன்பு பல அரசுகள் கவிழ்ந்ததை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். அப்படி மக்களவை கலைக்கப்பட்டால் எல்லா மாநில சட்டசபைகளையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா? என்றும் கேள்வி எழுகிறது. எனவே, இந்த முயற்சியால் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.

இதேபோல் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதிகளும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

2 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளில் நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு 4 கட்சிகள் ஆதரவும், 9 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளன.

பாரதீய ஜனதாவும், காங்கிரசும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

Next Story