ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனு குறித்து இன்று விசாரணை


ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனு குறித்து இன்று விசாரணை
x
தினத்தந்தி 10 July 2018 1:28 AM GMT (Updated: 10 July 2018 1:28 AM GMT)

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனு குறித்து டெல்லி நீதிமன்றத்தில் இன்று அடுத்தகட்ட விசாரணை நடைபெற இருக்கிறது. #AircelMaxisCase #ChidambaramBailPlea

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி  அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதே வழக்கில் சி.பி.ஐ முன் ஆஜரான ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் கேள்விகள் எழுப்பினர். விசாரணையின் போது, முறைகேடு குறித்து பல கேள்விகளை ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை அமலாக்க துறை கைது செய்வதற்கு எதிராக முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 5-ந் தேதி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் ஜூலை 10ந்தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை ஜூலை 10ந்தேதி நடைபெறும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணை இன்று நடைபெற இருக்கிறது. முன்னதாக ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தை கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி சென்னை விமானநிலையத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து கார்த்தி சிதம்பரத்திற்கு கடந்த மார்ச் 23-ந் தேதி டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story