ப.சிதம்பரம் வீட்டில் நகை–பணம் திருடிய வேலைக்கார பெண்கள் கைது


ப.சிதம்பரம் வீட்டில் நகை–பணம் திருடிய வேலைக்கார பெண்கள் கைது
x
தினத்தந்தி 10 July 2018 2:02 PM GMT (Updated: 10 July 2018 2:02 PM GMT)

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை–பணம் திருடிய வேலைக்கார பெண்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை பகுதியில் உள்ள முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீட்டில் திருட்டு போய்விட்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. தங்க நகைகள், ஒரு தங்கக்காசு, 6 பட்டு புடவைகள் மற்றும் ரூ.1½ லட்சம் ஆகியவை திருட்டு போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கியது. அப்போது ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.  அவர்களும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. திருடப்பட்ட பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ப.சிதம்பரம் தரபில் புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே திருட்டுப்போன நகை மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து திடீரென் நுங்கம்பாக்கம் போலீசார் வெண்ணிலா, விஜி ஆகியோரை விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டதால் இந்த வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story