இயல்பு நிலைக்கு திரும்பும் மும்பையில் 3-4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


இயல்பு நிலைக்கு திரும்பும் மும்பையில் 3-4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 July 2018 3:14 PM GMT (Updated: 11 July 2018 3:14 PM GMT)

இயல்பு நிலைக்கு திரும்பும் மும்பையில் 3-4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மும்பை,

 
மும்பையில் 5 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழை நின்று இன்று சூரியன் தலைகாட்டியது. இதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. ஆறு, வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நகரங்களில் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. பெரும்பாலான பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மிதக்கிறது. மழையின் தாக்கம் குறைந்ததும் மும்பையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. சாலைகளில் தேங்கியிருந்த வெள்ளம் படிப்படியாக வடிந்து வருவதால் வாகன போக்குவரத்தும் தொடங்கியுள்ளது.  தண்டவாளங்களை சூழ்ந்த வெள்ளமும் வடிந்ததை அடுத்து ரெயில் போக்குவரத்து சீரடைய தொடங்கியது. 

மும்பையை பொறுத்தவரை கடந்த 5 நாட்களில் 86 செ.மீ. மழை பெய்து இருப்பதாகவும், இது சராசரியாக ஒரு மாத காலத்தில் பெய்யும் மழை அளவு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மழை நின்ற போதிலும் மும்பை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் 3-4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. சனிக்கிழமை வரை கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
 
 மும்பை மாநகராட்சி பேரிடர் மேலாண்மை பிரிவு சார்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story