மணிப்பூரில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி


மணிப்பூரில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட  9 பேர் பலி
x
தினத்தந்தி 11 July 2018 6:24 PM GMT (Updated: 11 July 2018 6:24 PM GMT)

கனமழையால் மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் இறந்துள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூர்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சேதம் விளைந்து வருகிறது. அந்தவகையில் தமங்லாங் மாவட்டத்துக்கு உட்பட்ட 3 இடங்களில் நேற்று காலையில் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் துரதிர்ஷ்டவசமாக சிக்கிக்கொண்ட 16 பேரில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்களில் 2 சிறுவர்களின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை. அவற்றை மீட்கும் பணியில் போலீசாரும், உள்ளூர்வாசிகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்–மந்திரி பைரேன் சிங் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் மீட்பு நடவடிக்கைகளையும் அவர் தீவிரப்படுத்தி இருக்கிறார். இதைப்போல வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுக்கான மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்கும், நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Next Story