டெல்லி ‘சூப்பர் மேன்’ என கூறும் ஆளுநர் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? -சுப்ரீம் கோர்ட்டு


டெல்லி ‘சூப்பர் மேன்’ என கூறும் ஆளுநர் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? -சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 12 July 2018 10:13 AM GMT (Updated: 12 July 2018 10:13 AM GMT)

டெல்லியில் திடக்கழிவு மேலாண்மை விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

புதுடெல்லி,

டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜூலை 10-ம் தேதி விசாரணை நடைபெற்ற போது, டெல்லியில் குப்பையில் மூழ்கி வருகிறது, மும்பை நீரில் மூழ்கி வருகிறது. ஆனால் அரசு எதுவும் செய்வது கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு கடிந்துக்கொண்டது.  திடக்கழிவு மேலாண்மையில் மாநிலங்களின் கொள்கையை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்யாத 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு அபராதம் விதித்தது.

இன்று விசாரணை நடைபெற்றபோது, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மாநகராட்சி அதிகாரங்களுக்கு உரிமை கொண்டாடும் துணைநிலை ஆளுநர், பணிகளை செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பியது.
 
உங்களுக்குதான் அதிகாரம் உள்ளது என்கிறீர்கள், நீங்கள்தான் சூப்பர் மேன் என்கிறீர்கள், ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று துணைநிலை ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. துணைநிலை ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் குப்பைகளை அகற்றுவது மாநகராட்சியின் பணியாகும், அதனை கண்காணிப்பதுதான் என்னுடைய பணியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, குப்பையை அகற்றுவது முதல்-மந்திரியா அல்லது துணைநிலை ஆளுநரா என மத்திய அரசு மற்றும் டெல்லி அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.

Next Story