பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சட்ட அந்தஸ்து நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது


பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சட்ட அந்தஸ்து நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 2 Aug 2018 10:00 PM GMT (Updated: 2 Aug 2018 9:50 PM GMT)

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க வகைசெய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்ற மக்களவை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி, 

தேசிய எஸ்.சி. ஆணையம், தேசிய பழங்குடியினர் ஆணையம் ஆகியவற்றுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோல், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிப்பதற்காக, அரசியல் சட்டத்தில் 123-வது திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

இந்த மசோதா, கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மாநிலங்களவைக்கு சென்றபோது, தேர்வுக்குழுவின் சிபாரிசு அடிப்படையில் சில திருத்தங்களுடன், கடந்த ஆண்டு ஜூலை 31-ந் தேதி நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களையில், மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டதால், அந்த திருத்தங்களுடன் மசோதாவை நிறைவேற்றுவதற்காக, மீண்டும் மக்களவையில் நேற்று இம்மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மசோதா மீது மாலை 5 மணிக்கு ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் இருக்கையில் இருந்த தம்பிதுரை அறிவித்தார். அதற்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆட்சேபனை தெரிவித்தார். இருப்பினும், அலுவல் ஆய்வுக் குழுவில் எடுத்த முடிவை, தான் தெரிவித்ததாக தம்பிதுரை கூறினார்.

அதன்படி, நேற்று மாலை, இந்த மசோதா மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. அதில், அதிக ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

பிஜு ஜனதாதள உறுப்பினர் கொண்டு வந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது. ஓட்டெடுப்பின்போது, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சபையில் இருந்தனர்.

முன்னதாக, விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய மத்திய சமூக நீதித்துறை மந்திரி தாவர் சந்த் கெலாட், பிற்படுத்தப்பட்டோரின் நலன்களை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story