நீதிபதி கே.எம் ஜோசப் விவகாரம்: கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்


நீதிபதி கே.எம் ஜோசப் விவகாரம்: கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 3 Aug 2018 5:27 AM GMT (Updated: 3 Aug 2018 5:27 AM GMT)

நீதிபதி கே.எம் ஜோசப் பதவி உயர்வுக்கு கொலிஜியம் அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

புதுடெல்லி,

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக வழக்குரைஞர் இந்து மல்கோத்ரா, கே.எம். ஜோசப் ஆகியோரை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் அமைப்பு கடந்த ஜனவரி மாதம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி நிராகரித்தது. ஜோசப்பின் பெயரை பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்தது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதனிடையே  இந்து மல்கோத்ரா உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 27ஆம் தேதி பதவியேற்றார். 

இந்த நிலையில் இதுகுறித்து விவாதம் நடத்த இரண்டு முறை கொலிஜியம் கூடி உள்ளது. கொலிஜியத்தில் உள்ள எல்லா உறுப்பினர்களும் கூடி ஜோசப் நியமனம் குறித்து விவாதித்தார்கள். மத்திய அரசிடம் இரண்டு முறை அவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மத்திய அரசு அவர் பெயரை  ஏற்கவில்லை. 

இந்த நிலையில் மூன்றாவது முறையாக அவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இதில், கே.எம் ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதோடு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினீர் சரண் ஆகியோரது பதவி உயர்வுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

முன்னதாக, பிற மாநில நீதிமன்றங்களில் இருந்து போதிய பிரதிநிதித்துவம் இல்லை எனக்கூறி நீதிபதி கே.எம் ஜோசப் பதவி உயர்வு குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியது.  இந்த விவகாரத்தால்  உச்ச நீதிமன்றத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்த நிலையில் தற்போது இப்பிரச்சினை முடிவுக்கு வந்ததுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு அமல்படுத்தியது.
இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

Next Story