கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை


கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை
x
தினத்தந்தி 4 Aug 2018 4:34 AM GMT (Updated: 4 Aug 2018 4:34 AM GMT)

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை தரவுள்ளார். #Karunanidhi

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு, வயது மூப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை டாக்டர் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக தி.மு.க. தொண்டர்கள் காவேரி ஆஸ்பத்திரியின் வெளியே திரண்டு நின்று பிரார்த்தனை செய்வதோடு, பூரண குணமடையவேண்டும் என்று கோஷங்களையும் எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் கருணாநிதி நேற்று முன்தினம் 30 நிமிடம் உட்கார வைக்கப்பட்டார்.

இதனை அறிந்த தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கருணாநிதியின் உடல்நிலை தேறி வருவதால் ஆஸ்பத்திரியின் வெளியே தொடர்ந்து காத்துக்கிடந்த தொண்டர்கள் ஏராளமானோர் தற்போது இயல்பான தங்கள் சொந்த பணிகளை பார்க்க சென்றுவிட்டனர். இதனால் காவேரி ஆஸ்பத்திரியின் வெளியே நேற்று தொண்டர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

அரசியல் கட்சி தலைவர்கள், சினிமாத்துறையை சேர்ந்தவர்கள், அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வந்து விசாரித்து செல்கின்றனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி. உள்பட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் நலம் விசாரிக்க வருபவர்களுக்கு சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் பிரதமரும், மதசார்ப்பற்ற ஜனதா தள தலைவருமான தேவே கவுடா நேற்று காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வரும் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க உள்ளார். 

இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க  சென்னை வருகை தருகிறார். காவேரி மருத்துவமனைக்கு செல்லும் சந்திரபாபு நாயுடு, கருணாநிதியின் உடல் நிலை பற்றி, குடும்ப உறுப்பினர்களிடம் நலம் விசாரிப்பார்  என தெரிகிறது. 

Next Story