கோவா சுரங்க குத்தகை; அரசின் தவறால் ரூ.108 கோடி இழப்பு: மத்திய தணிக்கை துறை


கோவா சுரங்க குத்தகை; அரசின் தவறால் ரூ.108 கோடி இழப்பு:  மத்திய தணிக்கை துறை
x
தினத்தந்தி 4 Aug 2018 1:47 PM GMT (Updated: 4 Aug 2018 1:47 PM GMT)

கோவாவில் 13 சுரங்க குத்தகைக்கான முத்திரை வரியில் நடந்த தவறான பணியால் அரசுக்கு ரூ.108 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என மத்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது.

பனாஜி,

சுரங்க தொழிலில் சட்டவிரோத வகையில் முறைகேடுகள் நடக்கின்றன என எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து கடந்த 2012ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அதற்கு தடை விதித்தது.  இந்த நிலையில் இந்த தடை 2014ம் ஆண்டு நீக்கப்பட்டது.

இதனை அடுத்து கோவாவில் சுரங்க தொழிலுக்கான குத்தகை புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான மத்திய தணிக்கை துறை அறிக்கையில், 13 சுரங்க குத்தகை தொகை கணக்கீட்டின்படி அரசுக்கு ரூ.108 கோடி கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 5ந்தேதியில் இருந்து 2016ம் ஆண்டு பிப்ரவரி 16 வரையில் 13 சுரங்கங்களின் குத்தகையின்படி அரசுக்கு முத்திரை வரியாக ரூ.169.72 கோடி கிடைத்திருக்க வேண்டும்.  ஆனால் மாநில சுரங்க மற்றும் புவியியல் இயக்குநரகம் ரூ.66.45 கோடி நிதியையே வசூலித்துள்ளது.

இதனால் முத்திரை வரியாக கிடைத்திருக்க வேண்டிய ரூ.103.27 கோடி மற்றும் பதிவு கட்டணம் ஆக கிடைத்திருக்க வேண்டிய மற்றொரு ரூ.5.16 கோடி என மொத்தம் 108.43 கோடி அரசுக்கு வந்து சேரவில்லை.

இதற்கு முத்திரை வரி பற்றிய பணிகள் தவறாக நடந்துள்ளன என்பதே காரணம் என தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளது.


Next Story