பீகாரில் அனைத்து காப்பகங்களும் அரசால் நிர்வாகம் செய்யப்படும் -நிதிஷ் குமார்


பீகாரில் அனைத்து காப்பகங்களும் அரசால் நிர்வாகம் செய்யப்படும் -நிதிஷ் குமார்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:31 AM GMT (Updated: 6 Aug 2018 10:31 AM GMT)

பீகாரில் அனைத்து காப்பகங்களும் அரசால் நிர்வாகம் செய்யப்படும் என நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

பாட்னா, 

பீகாரின் முசாபர்பூரில், மாநில அரசின் நிதியுதவி பெறும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உதவிபெற்று காப்பகம் நடத்தப்பட்டது. இதில் தங்கியிருந்த சுமார் 34 சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.  இவ்விவகாரத்தினால் நிதிஷ் குமார் அரசு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், இனி பீகாரில் அனைத்து காப்பகங்களும் அரசால் நிர்வாகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இனி தொண்டு நிறுவனங்களால் காப்பகங்கள் நடத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம், காப்பகங்களுக்கு தேவையான கட்டிடம், உள்கட்டமைப்பை கொடுத்து அரசால் நிர்வாகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார் நிதிஷ் குமார்.

மாநில சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மா ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்திய நிலையில், “இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். அமைச்சர் மட்டத்தில் இருப்பவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்,” என கூறியுள்ளார் நிதிஷ் குமார். 

Next Story