திமுக தலைவர் கருணாநிதி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்


திமுக தலைவர் கருணாநிதி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 7 Aug 2018 1:38 PM GMT (Updated: 7 Aug 2018 1:38 PM GMT)

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். #Karunanidhi #KarunanidhiHealth #KauveryHospital #DMK

புதுடெல்லி,

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் சென்னை நோக்கி குவியத்துவங்கினர். 11-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, மாலை 6.10 மணியளவில் காலமானர்.   

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:- நாட்டில் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் மறைவு செய்தியை கேட்டு துயரமடைந்தேன். இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. அவசர நிலைக்கு கருணாநிதியின் வலுவான எதிர்ப்பு எப்போதும் நினைவு கூறப்படும்.அவரது ஆன்மா சாந்திடையட்டும்” என்று தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழில் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும்,  மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story