அதிகரிக்கும் கற்பழிப்பு சம்பவங்களால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வேதனை


அதிகரிக்கும் கற்பழிப்பு சம்பவங்களால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வேதனை
x
தினத்தந்தி 7 Aug 2018 10:00 PM GMT (Updated: 7 Aug 2018 8:35 PM GMT)

பீகார் காப்பக சிறுமிகள் கற்பழிப்பு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து வேதனை தெரிவித்தனர்.

புதுடெல்லி,

பீகாரின் முசாபர்பூரில் இயங்கி வந்த காப்பகம் ஒன்றில் தங்கி இருந்த 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

அப்போது, இந்த விவகாரத்தை வெளிக்கொணர்ந்த டாட்டா நிறுவனம், பீகாரில் இயங்கி வரும் 15 காப்பகங்களில் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் அரங்கேறியது தெரியவந்துள்ளதாக கூறியது. இதைப்போல நாட்டில் கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்த தேசிய குற்ற ஆவணக்காப்பகம், இந்தியாவில் ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுவதாக கூறியிருந்தது.

இந்த புள்ளி விவரங்களால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து வேதனை தெரிவித்தனர். நாட்டில் அனைத்து பக்கங்களிலும் கற்பழிப்பு நடப்பதாக கூறி கவலை வெளியிட்ட அவர்கள், காப்பக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு தேவையான பரிந்துரைகளை அளிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டனர்.

மேலும் இது போன்ற குற்ற செயல்கள் அரங்கேறும் காப்பகங்களுக்கு நிதியுதவி செய்யும் பீகார் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த கற்பழிப்பு விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்துமாறு டெல்லி மகளிர் ஆணையத்தை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இதில் அரசியலுக்கு துளியும் இடம் கொடுக்கக்கூடாது என அறிவுறுத்தினர்.

இதைப்போல கற்பழிப்பு செய்திகள் வெளியிடுவதில் ஊடகங்களுக்கும் நீதிபதிகள் கட்டுப்பாடுகளை விதித்தனர். அதன்படி பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை மங்கலாகவோ, மார்பிங் செய்தோ கூட வெளியிடக்கூடாது எனவும், பாதிக்கப்பட்டவரிடம் பேட்டி எடுக்கக்கூடாது எனவும் கண்டிப்பாக தெரிவித்தனர்.

Next Story