மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் பா.ஜனதா வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு


மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் பா.ஜனதா வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு
x

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பாராளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது.

தற்போது காலியாக இருக்கும் அந்த பதவிக்கு நடப்பு கூட்டத்தொடரில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, தேர்தல் நாளை நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கூட்டணியின் சார்பில் ஐக்கிய ஜனதாதளக் கட்சியை சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங் வேட்பாளராக போட்டியிடுகிறார். மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜனதா இருந்தபோதும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. எனவே பிராந்திய கட்சிகளின் ஆதரவை பெற பா.ஜனதா முனைப்பு காட்டி வருகிறது.

பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா தொடர்ந்து அரசை விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என சிவசேனா எம்.பி. அனில் தேசாய் கூறியுள்ளார். கடந்த மாதம் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது சிவசேனா விலகிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story