பா.ஜ.க. தலைவர் மாலை அணிவித்த பின் பால் கொண்டு சுத்தம் செய்யப்பட்ட அம்பேத்கார் சிலை


பா.ஜ.க. தலைவர் மாலை அணிவித்த பின் பால் கொண்டு சுத்தம் செய்யப்பட்ட அம்பேத்கார் சிலை
x
தினத்தந்தி 11 Aug 2018 7:33 AM GMT (Updated: 11 Aug 2018 7:33 AM GMT)

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர் மாலை அணிவித்து சென்ற பின் அம்பேத்கார் சிலையானது பால் மற்றும் கங்கை நீரால் சுத்தம் செய்யப்பட்டது.

மீரட்,

சமூகத்தில் தீண்டாமை வேற்றுமைகளுக்கு எதிராக பெரிய அளவில் போராடியவர் அம்பேத்கார்.  பெண்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான தனது ஆதரவினையும் தெரிவித்தவர்.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் சுனில் பன்சால் நேற்று மீரட் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே அம்பேத்கார் சிலை ஒன்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.  அதன்பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த வழக்கறிஞர்கள் சிலர், பால் மற்றும் கங்கை நீர் கொண்டு சிலையை சுத்தம் செய்து உள்ளனர்.  பன்சால் மாலை அணிவித்து அதனை அசுத்தப்படுத்தி விட்டார் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதுபற்றி வழக்கறிஞர் ஒருவர் கூறும்பொழுது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ராகேஷ் சின்ஹா வந்து மாலை அணிவித்து உள்ளார்.  பாரதீய ஜனதா அரசு தலித்துகளை நசுக்குகிறது.  அவர்கள் அம்பேத்காருக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை.  ஆனால் தங்களது கட்சியை ஊக்குவிப்பதற்காகவும் மற்றும் தலித் சமூகத்தினரை ஈர்ப்பதற்காகவும் அவரது பெயரை பயன்படுத்தி கொள்கின்றனர் என கூறியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த தலித் பெண் எம்.எல்.ஏ. மணீஷா அனுராகி என்பவர் வறட்சி சூழ்ந்த பண்டல்காண்ட் பகுதியில் உள்ள பழமையான ஆசிரமம் உள்ளே அமைந்த கோவிலுக்கு சென்றார்.  அவர் சாமி கும்பிட்டு விட்டு திரும்பிய பின்னர் அந்த பகுதி கங்கை நீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

அதன் சிலையும் அலகாபாத் நகருக்கு புனிதப்படுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது.  இதுபற்றி உள்ளூர்வாசிகள் கூறும்பொழுது, பெண்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.  அவர்கள் வெளியே இருந்து கும்பிட்டு செல்லவே அனுமதி உள்ளது என தெரிவித்தனர்.


Next Story