கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைப்பு ஆளுநர் சதாசிவம்


கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைப்பு ஆளுநர் சதாசிவம்
x
தினத்தந்தி 11 Aug 2018 11:21 AM GMT (Updated: 11 Aug 2018 11:55 AM GMT)

கேரளாவில் ஆகஸ்ட் 15-ல் நடைபெற உள்ள சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேரள ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார். #KeralaFloods

திருவனந்தபுரம்,

கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

கடந்த இரு நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து தனியார் செய்தி சேனலுக்கு கேரள ஆளுநர் சதாசிவம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டார்.  முதல்-மந்திரி, எதிர்க்கட்சித்தலைவர், அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் ஆகஸ்ட் 15-ல் நடைபெற உள்ள சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை ஆய்வு செய்கிறார். 

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஒரு மாத ஊதியம் ரூ. 1 லட்சத்தை வழங்கி உள்ளேன். சுதந்திர தினத்தன்று எளிமையான முறையில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்படும். சுதந்திர தினத்தன்று நிகழ்ச்சிக்காக செலவிடப்படும் தொகை நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story