கேரளாவில் கப்பல் மோதி படகு கவிழ்ந்து விபத்து: காணாமல் போன 9 மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு


கேரளாவில் கப்பல் மோதி படகு கவிழ்ந்து விபத்து: காணாமல் போன 9 மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு
x
தினத்தந்தி 11 Aug 2018 2:49 PM GMT (Updated: 11 Aug 2018 2:49 PM GMT)

கேரளாவில் கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 9 மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

குமரி மாவட்டம் ராமன்துறை கிராமத்தைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட 14- பேர் இந்த மாதம் 6-ம் தேதி கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஓசானி என்ற விசைபடகில் 6ம் தேதி மாலை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். முள்ளூர்துறை, மணக்ககுடியை சேர்ந்த 4 பேரும் அந்தப் படகில் சென்றுள்ளனர். மேலும், மேற்குவங்கத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் அந்தப் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

கொச்சி அருகே முனம்பம் பகுதியில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது இந்தப் படகு மீது ஒரு கப்பல் மோதியதில் படகு கடலில் முழ்கியது. ஆகஸ்ட் 7ம் தேதி அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கடலில் மூழ்கிய படகில் இருந்து 5- மீனவர்களை அந்த வழியாக சென்ற மற்றொரு படகில் வந்த மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். மீதமுள்ள 9 மீனவர்களை காணவில்லை. மீட்கப்பட்ட மீனவர்களில் ராமன் துறை கிராமத்தை சேர்ந்த ஜேக்கப், யுவராஜ் மற்றும் முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகிய மூவரும் வரும் வழியிலேயே உயிர் இழந்துள்ளனர்.

இந்தப் படகில் கொண்டுவரப்பட்ட ராமன்துறையயை சேர்ந்த எட்வின் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரையும் கொச்சின் உள்ள அரசு மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர் இழந்த மூவரின் உடல்கள்  பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், இறந்தவர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடலில் மாயமான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7-பேர் உட்பட 9 பேரின் நிலைமை என்ன என்பது குறித்து அவர்களின் உறவினர்கள் தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், விபத்தில் காணாமல் போன 9 மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் மீனவர் உடல் சிக்கியது. கடலில் மூழ்கி காணாமல் போன 9 மீனவர்களில் கேரளா மாநிலத்தை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 8 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது குறித்த விவரம் தெரியவரவில்லை.

Next Story