புயலால் விழுந்து கிடக்கும் மரங்களை கொண்டு பாலங்கள் அமைத்து மக்களை மீட்கும் ராணுவ வீரர்கள்


புயலால் விழுந்து கிடக்கும் மரங்களை கொண்டு பாலங்கள் அமைத்து மக்களை மீட்கும் ராணுவ வீரர்கள்
x
தினத்தந்தி 13 Aug 2018 12:15 PM GMT (Updated: 25 Oct 2018 1:08 PM GMT)

கேரளாவில் புயலால் விழுந்து கிடக்கும் மரங்களை கொண்டு பாலங்கள் அமைத்து மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். #KeralaFlood2018

திருவனந்தபுரம்

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் இருந்து இதுவரை 439 நிவாரண முகாம்களில் 53,501 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 1924 க்கு பிறகு  கேரளா  மிக மோசமான வெள்ளப் பாதிப்புக்கு உட்பட்டுள்ளது. பலர் தங்கள் உறவினர்களை இழந்துள்ளனர்,

மேலும் வயநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டம் மற்றும் மலைப்பாங்கான இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோழிக்கோடு மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக இராணுவம் சிறிய பாலங்களைக் கட்டி வருகின்றன. வெள்ள அபாயம் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் என்.டி.ஆர்.எப் ஆகியவை ஈடுபட்டுள்ளன.



கேரளா கிராமங்களில் தற்காலிக பாலங்கள் அமைத்து   மழைப்பொழிவு அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைத் தகர்த்தெறிந்து, தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதில் இராணுவம் 24x7 வேலை செய்து வருகிறது.

அத்தகைய ஒரு சம்பவத்தில், இராணுவ பொறியியலாளர் டாஸ்க் ஃபோர்ஸ், மலப்புரம் மாவட்டத்தில் மரங்களை கொண்டு 40 அடி பாலம் கட்டி உள்ளது.

இன்னொரு சம்பவத்தில், வயநாட்டில் உள்ள 800 பேரை  காப்பாற்றுவதற்காக மரங்களை பயன்படுத்தி தற்காலிக பாலம் கட்டப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள், அரசியல் கட்சிகள் பலவும் நிவாரண நிதி அளித்து வருகின்றன. நேற்று கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் உதவியுடன் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர் KJ அல்போன்ஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். மேலும் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.100 கோடி கேரள அரசுக்கு வழங்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில் கேரளாவின் வெள்ள சேதங்கள் குறித்த மதிப்பீட்டை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். அதில், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் ரூ.8316 கோடி என முதல்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 20,000 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. 10,000 கி.மீ., தூரத்திற்கு சாலைகள் பழுதடைந்துள்ளன. இதனால் ஏற்கனவே உடனடி நிவாரத்திற்கு வழங்கி உள்ள ரூ.820 கோடியுடன் கூடுதலாக ரூ.400 கோடியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுள்ளோம். என கூறி உள்ளார்.

Next Story