பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டித் தழுவிய விவகாரம்: தக்க நேரத்தில் சரியான பதிலடி கொடுப்பேன்- சித்து


பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டித் தழுவிய விவகாரம்: தக்க நேரத்தில் சரியான பதிலடி கொடுப்பேன்- சித்து
x
தினத்தந்தி 20 Aug 2018 1:32 PM GMT (Updated: 20 Aug 2018 1:32 PM GMT)

பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டித் தழுவிய விவகாரம் குறித்து தனது மவுனம் கலைத்த சித்து தக்க நேரத்தில் சரியான பதிலடி கொடுப்பேன் என்றார்.

சண்டிகார், 

பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் தனது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கவாஸ்கர், கபில்தேவ், நவ்ஜோத் சிங் சித்து (பஞ்சாப் சுற்றுலாத்துறை மந்திரி) ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட சித்து கடந்த 18–ந் தேதி இஸ்லாமாபாத் சென்று இம்ரான்கானின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார்.

அங்கு அவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை சந்தித்ததுடன் அவரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தவறு என்று பஞ்சாப் முதல்–மந்திரி அமரீந்தர் சிங்கும் கண்டித்தார். இதேபோல் பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் சித்துவின் செயலை கடுமையாக சாடின.

இந்த நிலையில் நாடு திரும்பிய சித்துவிடம் அவருக்கு எதிராக எழுந்துள்ள கண்டனக் குரல்கள் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், ‘‘தேவைப்படும் நேரத்தில் இதற்கு சரியான பதிலடி கொடுப்பேன். அத்தனை பேருக்கும் பதில் அளிப்பேன். அந்த அடி(பதில்) மிகப் பலமானதாக இருக்கும்’’ என்றார்.


Next Story