காஷ்மீரில் துப்பாக்கி சண்டை ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் பலி

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 29 Aug 2018 9:30 PM GMT (Updated: 29 Aug 2018 6:49 PM GMT)

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கனாபல் என்கிற இடத்துக்கு அருகே உள்ள முனிவாட் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கனாபல் என்கிற இடத்துக்கு அருகே உள்ள முனிவாட் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசாரும், ராணுவ வீரர்களும் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

சுதாரித்துக்கொண்ட போலீசாரும், ராணுவ வீரர்களும் உடனடியாக பதில் தாக்குதலை நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதனை தொடர்ந்து அவர்களின் உடலை போலீசார் கைப்பற்றினர். சுட்டக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அல்தாப் அகமது தார் மற்றும் உமர் ராஷித் என தெரியவந்தது.

இதில் அல்தாப் அகமது தார், அந்த இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டு வந்ததாகவும், அவர் பல ஆண்டுகளாக காஷ்மீரில் பதுங்கி இருந்து பல்வேறு பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வந்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story