கட்டாய விடுப்புக்கு எதிரான அலோக் வர்மாவின் மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்


கட்டாய விடுப்புக்கு எதிரான அலோக் வர்மாவின் மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 26 Oct 2018 1:08 AM GMT (Updated: 26 Oct 2018 1:08 AM GMT)

கட்டாய விடுப்புக்கு எதிரான அலோக் வர்மாவின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

புதுடெல்லி,

தன்னை கட்டாய விடுப்பில் செல்லுமாறு, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா தாக்கல் செய்த மனுவை மீது உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கவுள்ளது. முன்னதாக, ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிராக அலோக் குமார் வர்மா, உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். அதில், முக்கிய வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஐ அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்து, ஒரே இரவில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும், மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டது சட்டவிரோதம்; இதுபோன்ற தலையீடுகள், சிபிஐ-யின் சுதந்திரத்தையும் தன்னாட்சியையும் சீர்குலைத்துவிடும் என்று மனுவில் அலோக் குமார் வர்மா கூறியுள்ளார். இந்த மனு மீது தலைமை நீதிபதி ரஞ்சய் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. 

Next Story