கர்நாடகா: திப்பு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம்


கர்நாடகா: திப்பு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2018 4:06 AM GMT (Updated: 10 Nov 2018 4:06 AM GMT)

கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு,

கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா இன்று நடக்கிறது. மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திப்பு சுல்தான், இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அதனால் திப்பு ஜெயந்தி விழாவை அரசு நடத்தக்கூடாது என்றும் பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. 

மேலும் இந்த விழா அழைப்பிதழில் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை அச்சிடக்கூடாது என்று அக்கட்சி மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பா.ஜனதாவின் கடும் எதிர்ப்புக்கு இடையே திப்பு ஜெயந்தி விழா இன்று காலை 11.30 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நடக்கிறது. 

ஆனால், திப்பு ஜெயந்தி கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பாஜக உட்பட பல்வேறு அமைப்பினர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். மடிகேரி பகுதியில் திப்பு ஜெயந்தி கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மடிகேரியில், திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

முதல் மந்திரி புறக்கணிப்பு

திப்பு ஜெயந்தி விழாவை முதல் மந்திரி குமாரசாமி புறக்கணித்துள்ளார். மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதால், இந்த விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியாது எனவும், வேறு எந்த காரணமும் ஊகிக்க வேண்டாம் என்று முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story