அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டை மிரட்டுகிறது பிரதமர் மோடி புது குற்றச்சாட்டு


அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டை மிரட்டுகிறது பிரதமர் மோடி புது குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Nov 2018 9:55 AM GMT (Updated: 25 Nov 2018 9:55 AM GMT)

அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டை மிரட்டுகிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.



புதுடெல்லி,


அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் கூட்டணி கட்சியான சிவசேனாவிடம் இருந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவிலை விரைவில் கட்டும் விதமாக சட்டம் இயற்றும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதற்கிடையே கோவில் கட்டுவதை வலியுறுத்தும் விதமாக அயோத்தி நகரில் பிரமாண்ட மாநாட்டை விசுவ இந்து பரிஷத் நடக்கிறது. அதிகமான கரசேவகர்கள் குவிந்து வருகிறார்கள். 

ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். 2019 தேர்தலை கருத்தில் கொண்டு விசாரணையை தாமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை காங்கிரஸ் கேட்டுக்கொண்டு வருகிறது, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நீதிபதிகளுக்கு எதிராக இம்பீச்மென்ட் தீர்மானம் என மிரட்டுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார் பிரதமர் மோடி.

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நீதித்துறையை காங்கிரஸ் அரசியலுக்கு இழுக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். அதாவது காங்கிரஸ் நீதித்துறையில் அச்சம் போன்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. 2019 தேர்தல் காரணமாக அயோத்தி வழக்கை விசாரிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் கேட்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகளுக்கு காது கொடுக்காத நிலையில் இன்பீச்மென்ட் தீர்மானம் (தகுதிநீக்கம்) மூலம் மிரட்டுகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்று கேள்வியை எழுப்பியுள்ளார் பிரதமர் மோடி. மேலும் நீதியை நிலைநாட்ட நீதித்துறைக்கு முழு சுதந்திரம் அளிப்பதாகவும் கூறியுள்ளார் அவர். 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கை அக்டோபர் மாதம் ஜனவரி மாதம் விசாரிக்கப்படும் என ஒத்திவைத்தது. அதிலிருந்து கோவில் கட்டுவதுதொடர்பான கோரிக்கை வலுக்க தொடங்கியது. இவ்வழக்கில் சன்னி இஸ்லாமிக் பிரிவு தரப்பில் வாதாடிய காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் வழக்கை 2019 தேர்தலுக்கு பின்னதாக ஒத்திவைக்க வேண்டும் என்று கோரியதை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். 

Next Story