ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி இன்று அர்ஜென்டினா செல்கிறார்


ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி இன்று அர்ஜென்டினா செல்கிறார்
x
தினத்தந்தி 27 Nov 2018 11:44 PM GMT (Updated: 27 Nov 2018 11:44 PM GMT)

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று அர்ஜென்டினா புறப்பட்டு செல்கிறார். அங்கு சீன அதிபரையும் சந்தித்து பேசுகிறார்.

புதுடெல்லி,

அர்ஜென்டினா நாட்டில் உள்ள புனோஸ் ஐரெஸ் நகரில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் பயணமாக இன்று (புதன்கிழமை) அர்ஜென்டினா புறப்படுகிறார். டிசம்பர் 2–ந் தேதி அவர் இந்தியா திரும்புகிறார் என்று வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:–

‘நேர்மையான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஒருமித்த கட்டமைப்பை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் இந்த ஜி20 உச்சி மாநாடு நடக்கிறது. 3 கட்டங்களாக இந்த மாநாடு நடக்கிறது. 3 கட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.

10–வது மாநாடான இதில் முக்கியமாக கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து இந்தியா விளக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகள், அடுத்த 10 ஆண்டுகளில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் தலைவர்கள் விவாதிப்பார்கள். வர்த்தகம், மிகப்பெரிய சர்வதேச பிரச்சினைகள், பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டின் இடையே பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுவது உறுதியாகி உள்ளது. இதில் எல்லை பிரச்சினை குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு விஜய் கோகலே தெரிவித்தார்.

பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை.


Next Story